ரோகிங்கியா மக்களை முஸ்லீம்களாக பார்க்காமல் அகதிகளாக பாருங்கள்: ஓவைசி

ரோகிங்கியா மக்களை முஸ்லீம்களாக பார்க்காமல் அகதிகளாக பாருங்கள் என்று ஓவைசி மத்திய அரசை கேட்டுக்கொண்டுள்ளார்.
ரோகிங்கியா மக்களை முஸ்லீம்களாக பார்க்காமல் அகதிகளாக பாருங்கள்: ஓவைசி
Published on

ஐதரபாத்,

மியான்மர் நாட்டில் ராகினே மாகாணத்தில் கடந்த மாதம் 25ந் தேதி அர்சா என்னும் ரோஹிங்யா முஸ்லிம் கிளர்ச்சியாளர்கள், போலீசாரை தாக்கிய விவகாரம் பூதாகரமாகி விட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து ஒட்டுமொத்த ரோஹிங்யா முஸ்லிம் மக்கள் மீதும் அந்த நாட்டின் ராணுவமும், புத்த மதத்தினரும் வன்முறையை கட்டவிழ்த்து விட்டு கொண்டிருப்பதாக சர்வதேச அளவில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ரோஹிங்யா முஸ்லிம் மக்கள் வசிக்கக்கூடிய கிராமங்களில் தீ வைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. பல்வேறு இன்னல்களுக்கு இடையே தத்தளித்து வருகிற ரோஹிங்யா முஸ்லிம் மக்கள் உயிர் பிழைப்பதற்காக வங்காளதேசத்துக்கு சென்று தஞ்சம் அடைந்து வருகின்றனர். இதுவரையில் 3 லட்சத்து 70 ஆயிரம் ரோஹிங்யா முஸ்லிம் மக்கள் மியான்மரை விட்டு வெளியேறி வங்காளதேசம் வந்து உள்ளனர். வங்காளதேசம் எல்லை வந்து உள்ள ரோஹிங்யா அகதிகள் அடிப்படை தேவைகள் இன்றியும், மருத்துவ வசதியின்றியும் பல்வேறு பகுதிகளில் தங்கி உள்ளனர்.

பிராந்தியத்தில் சக்திவாய்ந்த நாடாக இந்தியாவை பார்க்கும் வங்காளதேசம், மியான்மரில் இருந்து அகதிகள் வெளியேற்றத்தை தடுக்கவும், ஏற்கனவே வெளியேறிய மக்களை ராகினேவில் மீண்டும் குடியமர்த்த மியான்மரை உறுதியளிக்க செய்யவும் இந்தியா மிகப்பெரிய பணியை ஆற்றவேண்டும் என பார்க்கிறது.இந்நிலையில் ரோஹிங்யா அகதிகளை திரும்ப பெற வேண்டும் என மியான்மருக்கு இந்தியா அழுத்தம் கொடுக்க தொடங்கி உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.

மத்திய அரசின் முடிவுக்கு அகில ஐதராபாத் தொகுதி எம்.பி.அசாதுதீன் ஒவைசி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஓவைசி இது பற்றி கூறும் போது, வங்காளதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரினுக்கு அடைக்கலம் அளித்துள்ள இந்திய அரசு, ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு ஏன் தஞ்சம் அளிக்க கூடாது?எல்லாவற்றையும் இழந்து இங்கு அடைக்கலம் அடைந்துள்ளவர்களை எந்த சட்டத்தின்படி திருப்பி அனுப்புவீர்கள்?. தஸ்லிமா நஸ்ரின் மோடிக்கு சகோதரி என்றால், ரோஹிங்கியா மக்கள் ஏன் அவருக்கு சகோதரர்கள் ஆக கூடாது?

இலங்கை மற்றும் திபெத்தில் இருந்து வந்தவர்களையும், வங்காளதேசத்தில் இருந்து வந்த சக்மா இனத்தவர்களையும் அகதிகளாக ஏற்றுகொண்ட இந்திய அரசு ரோஹிங்கியா மக்களை மட்டும் திருப்பி அனுப்புவதாக கூறுவது ஏன்?

இந்திய அரசியலமைப்பு சட்டம் இங்குள்ள அகதிகளுக்கும் சம உரிமை அளிக்கும் வகையில் அனைவருக்குமே பொதுவானதாக உள்ளது. எந்த சட்டத்தின்கீழ் அவர்களை நீங்கள் வெளியே அனுப்பப் போகிறீர்கள்? என பிரதமர் மோடியை நான் கேட்க விரும்புகிறேன். மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு ரோஹிங்கியா மக்களை முஸ்லிம்களாக பார்க்காமல் அகதிகளாக மட்டும் கருத வேண்டும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com