தர்மஸ்தலா விவகாரத்தில் நீதியின் பக்கம் அரசு நிற்கிறது ; கர்நாடக துணை முதல் மந்திரி


தர்மஸ்தலா விவகாரத்தில் நீதியின் பக்கம் அரசு நிற்கிறது ;  கர்நாடக துணை முதல் மந்திரி
x

தர்மஸ்தலா விவகாரத்தில் நீதியின் பக்கம் அரசு நிற்பதாக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறினார்.

பெங்களூரு,

தர்மஸ்தலா விவகாரத்தில் புகார்தாரரை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் இதுகுறித்து பெங்களூருவில் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தர்மஸ்தலா விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இந்த வழக்கில் நீதியின் பக்கம் அரசு நிற்கும். பா.ஜனதாவினர் இதுபற்றி கருத்து எதுவும் கூறவில்லை. ஏனெனில் அவர்கள் வேலியில் அமர்ந்து வேடிக்கை பார்ப்பவர்கள். தர்மஸ்தலா வழக்கின் பின்னணியில் சதி இருப்பதாக நான் சொன்ன பிறகு தான் அவர்கள் இந்த விவகாரம் குறித்து பேச தொடங்கினார்கள். தற்போது விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது. உள்துறை மந்திரி பரமேஸ்வர், முதல்-மந்திரி சித்தராமையா ஆகியோர் இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடத்தி ஆலோசித்தனர். அப்போது தர்மஸ்தலா விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.

நாங்கள்(கர்நாடக அரசு) யாருக்கும் ஆதரவாகவோ, ஒருதலைபட்சமாகவோ இல்லை. நாங்கள் நீதியின் பக்கம் மட்டுமே நிற்கிறோம். நாங்கள் எப்போதும் மதத்தை வைத்து அரசியல் செய்பவர்கள் அல்ல. நான் முன்பே இந்த விவகாரத்தில் சதி இருப்பதாகவும், அது கூடிய விரைவில் வெளிவரும் என்றும் சொன்னேன். அது தான் தற்போது நடந்துள்ளது. தர்மஸ்தலா விவகாரத்தில் விசாரணை நடத்துவது மிகவும் சவாலாக இருந்தது. அதை மிகவும் நுட்பமாக அரசு கையாண்டது.ஆனால் பா.ஜனதாவினர் தர்மஸ்தலாவுக்கு எதிராக அரசு அவதூறு பரப்பும் வேலையை செய்வதாக குற்றம்சாட்டினர். ஆனால் இந்த வழக்கில் அரசு நேர்மையான முறையில் விசாரணை நடத்தி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story