

இம்பால்,
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பைரேன் சிங் தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடந்து வந்தது. கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம், 'குகி' பழங்குடியினர் நடத்திய பேரணி மீது தாக்குதல் நடத்தப்பட்டதால், அவர்களுக்கும், 'மெய்தி' இனத்தினருக்கும் இடையே கலவரம் வெடித்தது.
கலவரத்தில் 260-க்கு மேற்பட்டோர் பலியானார்கள். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்தனர். இதற்கிடையே, வன்முறை நீடித்ததால், கடந்த ஆண்டு பிப்ரவரி 9-ந் தேதி, பைரேன்சிங் தலைமையிலான அரசு பதவி விலகியது. பிப்ரவரி 13-ந் தேதி, அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. சட்டசபை முடக்கி வைக்கப்பட்டது. 6 மாதங்களுக்கு பிறகு ஜனாதிபதி ஆட்சி நீட்டிக்கப்பட்டது.
இதனையடுத்து ஜனாதிபதி ஆட்சிக்காலம் கடந்த மாதம் 12-ம் தேதியுடன் முடிவடைந்தது. அதனையடுத்து மணிப்பூர் மாநில முதல்-மந்திரியாக கெம்சந்த் சிங் பதவியேற்றார். இவர் மெய்தி இனத்தை சேர்ந்தவர். அத்துடன் குகி பழங்குடி இனத்தை சேர்ந்த முன்னாள் பெண் மந்திரி நெம்சா கிப்ஜென் துணை முதல்-மந்திரியாக பதவியேற்றுக்கொண்டார். இருப்பினும் இரு இனங்களை சேர்ந்த ஆயு தக்குழுக்கள் இடையே அவ்வப்போது சண்டை நடந்து வருகிறது.
இந்நிலையில், மணிப்பூர் மாநிலம் உக்ருல் மாவட்டத்தில் தங்குல் நாகா சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தை தொடர்ந்து மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. இன்று அதிகாலை லிட்டன் சாரைக்கோங் பகுதியில் ஆள்நடமாட்டமில்லாத பல வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. ஆயுதம் ஏந்திய நபர்கள் அப்பகுதியில் பலமுறை துப்பாக்கி சூடு நடத்தியதால் பெரும் பதற்றம் நிலவுகிறது.
நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியாக உக்ருல் மாவட்டத்தில் ஐந்து நாட்களுக்கு இணையச் சேவைகளை மாநில அரசு நிறுத்தி வைத்துள்ளது. மாவட்டத்தின் சில பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் வன்முறை ஏற்படாமல் இருக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. பாதுகாப்புப் படையினர் மாவட்டம் முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.