65 பழமையான சட்டங்களை நீக்க மசோதா தாக்கல் : மத்திய சட்ட மந்திரி தகவல்

13-ந் தேதி தொடங்கும் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது பகுதியில், 65 பழமையான சட்டங்களை ரத்து செய்ய மசோதா முன்வைக்கப்படும் என்று மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜு கூறினார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

பனாஜி,

கோவா மாநில தலைநகர் பனாஜியில் 23-வது காமன்வெல்த் சட்ட மாநாடு தொடங்கியது. அதில் மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜு, மாநில கவர்னர் ஸ்ரீதரன் பிள்ளை, முதல்-மந்திரி பிரமோத் சவந்த் மற்றும் 52 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

மாநாட்டில், கிரண் ரிஜிஜு பேசியதாவது:-

இன்று நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு குடிமகனும் மத்திய அரசின் நலத்திட்டங்களால் பலன் அடைகிறார். நலத்திட்ட நாடு என்பதால், ஒவ்வொரு தனிமனிதரின் குரலையும் கேட்பது முக்கியம்.

சாமானியர்களின் வாழ்க்கை எளிதாக இருக்க மோடி அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மக்களுக்காகத்தான் சட்டங்கள் உள்ளன. சட்டங்களே தடைக்கற்களாக மாறும்போது, அவற்றை பின்பற்றுவது சுமையாக இருக்கும். அப்போது, அந்த சட்டங்கள் நீக்கப்பட வேண்டும்.

சட்டங்கள் ரத்து

அந்தவகையில் கடந்த எட்டரை ஆண்டுகளில், 1,486 பழமையான, நடைமுறைக்கு பொருந்தாத சட்டங்களை நீக்கி இருக்கிறோம். 13-ந் தேதி தொடங்கும் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது பகுதியில் மேலும் 65 சட்டங்களை நீக்க மசோதாவை முன்வைப்போம். நாட்டில் உள்ள கோர்ட்டுகளில் 4 கோடியே 98 லட்சத்துக்கு மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவற்றை குறைப்பது எளிதல்ல. ஏனென்றால், முடிவுக்கு வரும் வழக்குகளை விட 2 மடங்கு புதிய வழக்குகள் வந்து விடுகின்றன.

நிலுவை வழக்குகள்

ஒரு நீதிபதி, சராசரியாக நாள் ஒன்றுக்கு 50 முதல் 60 வழக்குகளை கையாள்கிறார். சில நீதிபதிகள், நாள் ஒன்றுக்கு 200 வழக்குகளை கூட முடித்து வைக்கிறார்கள். இருப்பினும், நிலுவை வழக்குகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நிலைமையை சமாளிக்க தொழில்நுட்பத்தை மத்திய அரசு பயன்படுத்தி வருகிறது. இ-கோர்ட்டுகளை தொடங்கி இருக்கிறோம். எங்கள் இறுதி இலக்கு, காகிதமற்ற கோர்ட்டுகள்தான்.

மத்தியஸ்தம் செய்வதை ஊக்குவிக்க மத்தியஸ்த மசோதாவையும் கொண்டுவர உள்ளோம் என்று அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com