

புதுடெல்லி,
தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் 3 ஆண்டு சாதனை குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டு மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தென்னிந்திய நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நிர்வாக சுதந்திரம்
நடந்து முடிந்த பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் 3 மசோதாக்கள் இரு அவைகளிலும் நிறைவேறி உள்ளது. பணியில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் பயிற்சி பெறாத ஆசிரியர்கள் பயிற்சி மசோதாவில் இந்தியாவின் மாபெரும் கல்வி நிறுவனங்களுக்கு நிர்வாக ரீதியான சுதந்திரம் வழங்கப்படுகிறது.
கட்டாய தேர்ச்சி முறை தொடர்பாக மாநிலங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது. 5-ம் வகுப்பு மற்றும் 8 வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு கட்டாய தேர்ச்சி வழங்குவது தொடர்பான மசோதா தற்போது பரிசீலனையில் இருக்கிறது.
இணையவழி கல்வி
இணையவழியில் அனைத்து வகையான கல்வியையும் அளிக்கும் ஸ்வயம் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. மொத்தம் 2,000 வகையான படிப்புகள் இதில் இடம் பெறவுள்ளன. ஒரே நேரத்தில் 10 லட்சம் பேர் வரை இதற்கான இணையதளத்தை பயன்படுத்த முடியும்.
உயர்கல்வி தொடர்பான ஒழுங்காற்று நிறுவனங்களான யு.ஜி.சி. மற்றும் ஏ.ஐ.சி.டி.இ. ஆகிய அமைப்புகள் வெளிப்படைத்தன்மையுடன் மாணவர்களுக்கு உலகத்தரமான கல்வியை வழங்கும் வகையில் சீரமைக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
திணிக்க மாட்டோம்
தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் வகையில் தமிழக அரசு மத்திய அரசிடம் தாக்கல் செய்துள்ள அவசர சட்டம் பற்றிய கேள்விக்கு அவர், மத்திய சட்ட அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளதால் இது தொடர்பாக ஒப்புதல் வழங்குவதற்கு மனிதவள மேம்பாட்டுத்துறைக்கு எந்த பிரச்சினையும் கிடையாது. நீட் தொடர்பான பிரச்சினை ஏற்கனவே நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்றார்.
தமிழகத்தில் இந்தி திணிப்பு பற்றிய கேள்விக்கு ஜவடேகர் பதில் அளிக்கையில், எந்த மொழியையும் மத்திய அரசு யார் மீதும் திணிக்காது. 21 இந்திய மொழிகளில் ஏதேனும் 3 மொழிகளை படிப்பதையே மத்திய அரசு வலியுறுத்துகிறது என்றார்.