அரசுகள் எப்போதும் சரியாக இருப்பதில்லை: போராட்டங்கள், எதிர்ப்புகள் குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதி கருத்து

போராட்டங்கள், எதிர்ப்புகள் தொடர்பாக, அரசுகள் எப்போதும் சரியாக இருப்பதில்லை என்று உச்ச நீதிமன்ற நீதிபதி தீபக் குப்தா கருத்து தெரிவித்துள்ளார்.
அரசுகள் எப்போதும் சரியாக இருப்பதில்லை: போராட்டங்கள், எதிர்ப்புகள் குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதி கருத்து
Published on

புதுடெல்லி,

உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பாக ஜனநாயகமும் எதிர்ப்புணர்வும் என்ற தலைப்பிலான கருத்தரங்கம் திங்களன்று நடைபெற்றது.

இதில் உச்ச நீதிமன்ற நீதிபதி தீபக் குப்தா கலந்து கொண்டு உரையாற்றினார். அதில் பேசிய அவர், தேர்தலில் ஒரு கட்சி 51 சதவீத வாக்குகளை பெற்றது என்றால் மீதமுள்ள 49% மக்களும் அடுத்த ஐந்து ஆண்டு காலம் எதுவுமே பேசக் கூடாது என்று அர்த்தமல்ல. ஒவ்வொரு குடிமகனுக்கும் ஜனநாயகத்தில் பங்கு உள்ளது. அரசுகள் எப்போதுமே சரியானவையாக இருப்பதில்லை. நாம் அனைவரும் தவறு செய்கிறோம், எதிர்ப்புகள் வன்முறையாக மாறாத வரை அரசுகளுக்கு அதை தடுக்க உரிமையில்லை.

ஒரு விஷயத்தில் நீங்கள் வேறுபட்ட கருத்து கொண்டிருப்பதால் நீங்கள் நாட்டை அவமரியாதை செய்வதாக அர்த்தம் கிடையாது. மாறுபட்ட சிந்தனைகள் உதிக்கும்போதே அங்கு எதிர்ப்புணர்வு உண்டாகும். கேள்வி எழுப்புவது என்பது ஜனநாயகத்தின் வழிவந்த உரிமையாகும். அமைதியான வழிகளை கடைபிடிக்கும் வரை எதிர்க்கட்சிகளுக்கு எப்போதுமே போராடுவதற்கு உரிமை உண்டு.

சமீபத்தில் நீதிபதி சந்திராசூட் உரை ஒன்றில் தெரிவித்ததைப் போன்று, எதிர்ப்பவர்களை தேசவிரோதி என்று முத்திரை குத்துவது ஆராய்ந்தறியும் வகையிலான ஜனநாயகத்தை தடுத்து விடும். எனவே அரசை எதிர்ப்பவர்களை தேச விரோதிகள் என்று முத்திரை குத்தக் கூடாது. குடிமகன்களின் சிவில் உரிமைகளை பாதுகாக்கும் போதுதான் ஜனநாயகம் வெற்றி அடைந்ததாகக் கருத முடியும்.

எதிர்கருத்துக்களுக்கு எப்போதும் முக்கியமான பங்கு உண்டு. அது ஊக்குவிக்கப்பட வேண்டும். நாட்டை வழிபடுத்துவதற்குத் தேவையான நல்ல வழிகளை கண்டறிய அது உதவும் என்று அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com