சட்டசபை கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்த கவர்னர்- கர்நாடக அரசியலில் பரபரப்பு

கவர்னரின் முடிவுக்கு எதிராக சட்ட போராட்டம் நடத்துவது குறித்து கர்நாடக அரசு ஆலோசனை நடத்தி வருகிறது
பெங்களூரு,
கர்நாடாகவில் ஆளும் காங்கிரசுக்கும், கவர்னர் தாவர்சந்த் கெலாட்டுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கர்நாடக அரசு நிறைவேற்றிய சில மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் அவர் திருப்பி அனுப்பி வந்துள்ளார். இத்தகைய சூழ்நிலையில் மத்திய அரசின் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்ட பெயர் மாற்றத்துக்கு கர்நாடக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த திட்டத்தின் புதிய மசோதாவை ரத்து செய்யவும் கர்நாடக அரசு வலியுறுத்தி வருகிறது. இதே கோரிக்கையை வலியுறுத்தி கர்நாடக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற கர்நாடக அரசு முடிவு செய்தது. இதற்காக கர்நாடக சட்டசபையின் கூட்டத்தொடரை இன்றுதொடங்கி 31-ந்தேதி வரை நடத்துவதாக சபாநாயர் யு.டி.காதர் அறிவித்தார்.
இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் சட்டசபையின் கூட்டுக்கூட்டத்தில் கவர்னர் தாவர்சந்த் கெலாட் உரையாற்றுவார் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி கர்நாடக சட்டசபையை இன்று காலை 11 மணிக்கு பெங்களூரு விதான சவுதாவில் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. முதல் கூட்டம் என்பதால் கவர்னர் உரையுடன் சபை கூடும். இந்த கவர்னர் உரையில் மத்திய அரசுக்கு எதிரான அம்சங்கள் இருப்பதால் கர்நாடக சட்டசபை கூட்டத்தை புறக்கணிப்பதாக கவர்னர் தாவர்சந்த் கெலாட் அறிவித்துள்ளார். இதனால் திட்டமிட்டபடி இன்று (வியாழக்கிழமை) சட்டசபை கூட்டத் தொடர் தொடங்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
.அதே வேளையில் கவர்னரின் முடிவுக்கு எதிராக சட்ட போராட்டம் நடத்துவது குறித்து கர்நாடக அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. மேலும் கவர்னரின் செயலுக்கு எதிராக ஜனாதிபதியிடம் புகார் தெரிவிக்கவும் முதல்-மந்திரி சித்தராமையா திட்டமிட்டுள்ளார். இந்த விவகாரம் கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






