

கொல்கத்தா,
கவர்னர் ஒரு பைத்தியக்கார நாய் போல் மேற்கு வங்காளத்தில் சுற்றி திரிகிறார் என திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. பேசியது சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.
மேற்கு வங்காளத்தில் கடந்த 2014ம் ஆண்டு நாரதா பத்திரிகை நிறுவனம் ஒரு ஸ்டிங் ஆபரேஷன் நடத்தியது. இதன்பின்னர் 2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு முன் அந்த வீடியோவை வெளியிட்டது.
அந்த வீடியோ, போலி நிதி நிறுவனம் ஒன்றுக்கு ஆதரவாக நடந்து கொள்வதற்காக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மந்திரிகள், எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் பணம் பெற்ற விவரங்களை அம்பலப்படுத்தியது.
எனினும், மம்தா பானர்ஜிக்கு எதிராக தேர்தலில் இது எதிரொலிக்கவில்லை. இந்நிலையில், இந்த விவகாரம் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது. கடந்த 4 ஆண்டுகளாக நடந்த விசாரணையின் தொடர்ச்சியாக அக்கட்சியினர் 4 முக்கிய உறுப்பினர்கள் இன்று கைது செய்யப்பட்டனர்.
அக்கட்சியை சேர்ந்த மந்திரிகளான பிர்ஹத் ஹக்கீம், சுப்ரதா முகர்ஜி, எம்.எல்.ஏ. மதன்மித்ரா, முன்னாள் மந்திரி சோவன் சாட்டர்ஜி ஆகிய 4 பேருடன், ஜாமீனில் வெளிவந்த ஐ.பி.எஸ் அதிகாரி எஸ்.எம்.எச். மீர்சா என்பவரும் இந்த வழக்கில் 5வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு உள்ளார். கவர்னரின் ஒப்புதலின் பேரிலேயே இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இந்த கைது குறித்து அறிந்ததும் முதல் மந்திரி மம்தா பானர்ஜி தனது கட்சி நிர்வாகிகளுடன் கொல்கத்தாவில் உள்ள சி.பி.ஐ அலுவலகத்துக்கு சென்றார். அக்கட்சியை சேர்ந்த தொண்டர்கள் பலரும் சி.பி.ஐ அலுவலகம் முன் திரண்டனர். இதனால், பெரும் பதற்றம் நிறைந்த சூழல் காணப்பட்டது. இதனை தொடர்ந்து வன்முறை ஏற்படாமல் தடுக்க அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.
சி.பி.ஐ. அலுவலகம் மீது கல்வீசி தாக்குதலும் நடத்தப்பட்டது. இதனால், போலீசார் லேசான தடியடி நடத்தினர். குற்றம் சாட்டப்பட்ட 5 பேரின் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
சி.பி.ஐ அதிகாரிகளிடம் பேசிய மம்தா பானர்ஜி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்ந்த மூத்த தலைவர் மற்றும் எம்.எல்.ஏக்களை நீங்கள் எப்படி கைது செய்யலாம். அவர்கள் சரியான நடைமுறை இல்லாமல் கைது செய்யப்பட்டுள்ளனர். முடிந்தால் என்னை கைது செய்யுங்கள் என்று ஆவேசமுடன் கூறினார்.
இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யான கல்யாண் பானர்ஜி செய்தியாளர்களிடம் இன்று பேசும்பொழுது, கொரோனா காலத்தில் தேவையில்லாமல் யாரையும் பிடிக்கவோ, கைது செய்யவோ கூடாது என சுப்ரீம் கோர்ட்டு தனது தீர்ப்பொன்றில் கூறியுள்ளது.
இது உங்களுக்கே நன்றாக தெரியும். இருந்தபோதிலும், சி.பி.ஐ. மற்றும் போலீசார் எங்களுடைய உறுப்பினர்களை கைது செய்துள்ளனர். நாங்கள் கோர்ட்டுக்கு செல்ல இருக்கிறோம்.
கவர்னர், மாநில அரசுடன் ஆலோசனை மேற்கொள்ளாமல் பழிவாங்கும் நோக்குடன் செயல்படுகிறார். கவர்னர் ரத்தம் உறிஞ்சும் காட்டேரியாக இருக்கிறார்.
வருகிற 2024ம் ஆண்டு தேர்தலுக்கு முன் பா.ஜ.க.வில் இருந்து சீட் பெறுவதற்கு அவர் முயற்சித்து வருகிறார். அதனாலேயே எங்களுடைய கட்சிக்கு எதிராக என்ன செய்ய முடியுமோ அதனை அவர் செய்து வருகிறார்.
ரத்தம் உறிஞ்சியான அவர் ஒரு நிமிடம் கூட இங்கிருக்க கூடாது. அவர் ஒரு பைத்தியக்கார நாய் போல் மேற்கு வங்காளத்தில் சுற்றி திரிகிறார் என ஆவேசமுடன் பேசியுள்ளார். கவர்னரை பைத்தியக்கார நாய் என திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. ஒருவர் கூறியது சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.