

பெங்களுரு,
தனது ஆட்சிக்காலம் நிறைவடைய இன்னும் இரண்டு ஆண்டுகள் இருக்கும் நிலையில், அம்மாநில பா.ஜ.கவிற்குள் ஏற்பட்ட உட்கட்சி பூசல் காரணமாக கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
எடியூரப்பாவிற்கு எதிராக சுற்றுலாத்துறை அமைச்சர் சி.பி.யோகேஷ்வர், பா.ஜ.க எம்எல்ஏக்கள் பசனகவுடா எத்னால், அரவிந்த் பெல்லத் உள்ளிட்டோர் பகிரங்கமாக ஊடகங்களிலும், பொது மேடைகளிலும் விமர்சித்து வந்தனர்.
இதனைத் தொடர்ந்து டெல்லி சென்று பிரதமர் மோடி, பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட மூத்த தலைவர்களை சந்தித்தார். இந்த சூழலில் கடந்த ஜூலை 22ஆம் தேதி தனது டுவிட்டர் பக்கத்தில், "பா.ஜ.கவின் உண்மையான தொண்டனாக இருப்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன். நான் சார்ந்த கட்சிக்கு சேவை செய்வது எனது கடமை என்று பதிவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து எடியூரப்பா இன்று கர்நாடக மாநில கவர்னரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். கடந்த 2019ம் ஆண்டு ஜூலை 26ஆம் தேதி நான்காவது முறையாக முதல்-மந்திரியாக பதவியேற்ற எடியூரப்பா சரியாக அதே நாளில் ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையிலான அமைச்சரவையை கலைத்து அம்மாநில கவர்னர் தவார் சந்த் கெலாட் உத்தரவிட்டுள்ளார். முன்னதாக முதல்-மந்திரி பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்த நிலையில் இந்த அமைச்சரவை கலைப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.