மத்திய-மாநில அரசுகளுக்கிடையே கவர்னர்கள் பாலமாக செயல்பட வேண்டும் - ஜனாதிபதி வலியுறுத்தல்

மத்திய-மாநில அரசுகளுக்கிடையே மிக முக்கியமான இணைப்பு பாலமாக செயல்பட வேண்டிய பொறுப்பு, கவர்னர்களுக்கு இருக்கிறது என்று ஜனாதிபதி கூறினார்.
மத்திய-மாநில அரசுகளுக்கிடையே கவர்னர்கள் பாலமாக செயல்பட வேண்டும் - ஜனாதிபதி வலியுறுத்தல்
Published on

புதுடெல்லி,

டெல்லியில், கவர்னர்கள், துணைநிலை கவர்னர்களின் 50-வது மாநாடு நடைபெற்றது. அதில், பழங்குடியினர் நலன், குடிநீர், வேளாண்மை, உயர் கல்வி உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

அந்த மாநாட்டில், நேற்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நிறைவுரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

வருகிற 26-ந் தேதி, அரசியல் சட்டம் ஏற்கப்பட்டதன் 70-வது ஆண்டுவிழா கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம், அடிப்படை உரிமைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு உண்டாக்க பிரசாரம் தொடங்கப்படும்.

இந்த விழிப்புணர்வை உருவாக்குவதில் கவர்னர்கள் முக்கிய பங்கு வகிக்க வேண்டும். கவர்னர் மாளிகைகளில், அரசியல் சட்ட ஏற்பு தினத்தை விமரிசையாக கொண்டாட வேண்டும்.

நமது கூட்டாட்சி முறையில், கவர்னர்கள் மிக முக்கிய இணைப்பு பாலம் போன்றவர்கள். மத்திய-மாநில அரசுகளுக்கிடையே நல்ல ஒருங்கிணைப்பை உறுதிப்படுத்த பாலம் போல் செயல்பட வேண்டிய பொறுப்பு கவர்னர்களுக்கு இருக்கிறது.

கவர்னர் மாளிகைகள், பொதுமக்களுடன் தொடர்பு இல்லாத, காலனி ஆட்சி விட்டுச்சென்ற பதவி என்ற கருத்து நிலவி வருகிறது. அதை மாற்றி, பொதுமக்கள் எளிதில் அணுகும் வகையில் கவர்னர் மாளிகைகளை மாற்ற வேண்டும். பொதுமக்களுடன் கவர்னர்கள் நேரடி தொடர்பு கொள்ள வேண்டும்.

காடு, ஏரி, ஆறு போன்ற நீர்வளங்களை பாதுகாக்க வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை கடமை ஆகும். நாட்டின் முன்னேற்றத்துக்காக அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட வேண்டிய அரசியல் சட்ட கடமையும் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. இவ்வாறு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com