கவர்னர்கள் 5 முக்கிய திட்டங்களில் கவனம் செலுத்த வேண்டும் - மாநாட்டில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வேண்டுகோள்

கவர்னர்கள் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த 5 திட்டங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்று கவர்னர்கள் மாநாட்டில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வேண்டுகோள் விடுத்தார்.
கவர்னர்கள் 5 முக்கிய திட்டங்களில் கவனம் செலுத்த வேண்டும் - மாநாட்டில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வேண்டுகோள்
Published on

புதுடெல்லி,

டெல்லி ஜனாதிபதி மாளிகையில் கவர்னர்கள் மற்றும் துணை நிலை கவர்னர்களின் 2 நாள் மாநாடு நேற்று தொடங்கியது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மாநாட்டுக்கு தலைமை தாங்கி தொடக்க உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

நாட்டின் வளர்ச்சிக்கு கூட்டுறவு மற்றும் கூட்டாட்சியின் அவசியத்தை நாம் வலியுறுத்திவரும் வேளையில் கவர்னர்களின் பங்கு மேலும் முக்கியமானதாக உள்ளது. அனைத்து கவர்னர்களுக்கும் பொதுவாழ்வில் அதிகமான அனுபவம் உள்ளது. இந்த அனுபவத்தின் மூலம் நாட்டு மக்கள் அதிகபட்ச பலனை அடைய வேண்டும்.

நாம் அனைவரும் மக்களுக்காகத்தான் பணியாற்றுகிறோம், அவர்களுக்கு பதில் சொல்லும் இடத்திலும் இருக்கிறோம். அரசியல்சாசனத்தை பாதுகாப்பதில் கவர்னர்களின் பங்கு எல்லை அற்றது. தங்கள் மாநில மக்களின் நலன் மற்றும் சேவையில் தொடர்ந்து ஈடுபடுவதற்கான அரசியல்சாசன அர்ப்பணிப்பும் அவர்களுக்கு இருக்கிறது.

புதிய இந்தியாவுக்கான புதிய வேலை கலாசாரத்தை மேற்கொள்வதை அடிப்படையாக கொண்டு இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த மாநாடு மிகவும் பயனுள்ளதாகவும், இலக்கை அடைவதாகவும் அமைய வேண்டும். மூத்த கவர்னர்களுடன் ஆலோசனை நடத்தி 5 தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் உள்ள நீராதாரங்களை பாதுகாப்பதும், உகந்ததற்கு மட்டுமே பயன்படுத்துவதும் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய பிரச்சினையில் ஒன்றாக இருக்கிறது. எனவே தூய்மை இந்தியா திட்டத்தைப்போல நீராதாரங்களை பாதுகாக்கும் ஜல் சக்தி அபியான் திட்டத்தையும் மிகப்பெரிய மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும்.

புதிய உயர்கல்வி கொள்கை இந்தியாவை பொது அறிவில் அதிக சக்தி பெற்ற நாடாக மாற்றும். இதன்மூலம் நமது அனைத்து உயர்கல்வி நிலையங்களிலும் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க முயற்சி மேற்கொள்ளப்படும். கவர்னர்கள் வேந்தர்களாகவும் இருப்பதால் அந்த பொறுப்பையும் செயல்படுத்தும் வகையில் சரியான வழிகாட்டுதலை அளிக்க வேண்டும்.

நாட்டின் வளர்ச்சிக்கு மட்டுமின்றி மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்படவும் கவர்னர்கள் சரியான வழிகாட்ட வேண்டும். பழங்குடியினரின் அதிகாரமளித்தல் மற்றும் மேம்பாடு உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் உள்ளடங்கிய வளர்ச்சியுடன் தொடர்புடையதாக உள்ளது. எனவே பழங்குடியினரின் நலனுக்காகவும் மற்றும் வேளாண்மையில் சீர்திருத்தம் ஆகியவற்றுக்காகவும் பாடுபட வேண்டும். இவ்வாறு ஜனாதிபதி பேசினார்.

மாநாட்டில் பிரதமர் நரேந்திரமோடி, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரும் பேசினார்கள். சில கவர்னர்கள் அடங்கிய துணை குழுவினர் 5 முக்கிய திட்டங்கள் பற்றி விரிவாக பேசினார்கள்.

இந்த தகவல்கள் ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com