

திருவனந்தபுரம்,
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வரும் நிலையில், மாநில அரசுகளின் சார்பில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கேரளாவில் ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்டிருந்த அரசு பஸ் போக்குவரத்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.
மாநிலத்தில் கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர மற்ற அனைத்து நகரங்களுக்கும் இ-பாஸ் இன்றி மக்கள் சென்று வர அரசு அனுமதி வழங்கியது. ஆனால் வெளி மாநிலங்களுக்கு மட்டும் பஸ் போக்குவரத்து தொடங்கப்படவில்லை. இந்த நிலையில் முதல் கட்டமாக கர்நாடகா மாநிலத்திற்கு மீண்டும் அரசு பஸ் போக்குவரத்தை தொடங்க கேரள அரசு முடிவு செய்துள்ளது.
இது பற்றி கேரள போக்குவரத்து துறை மந்திரி ஆண்டனி ராஜ் கூறியதாவது:-
கேரளாவில் இருந்து வெளிமாநிலங்களுக்கு பஸ் போக்குவரத்தை தொடங்க முடிவு செய்துள்ளோம். அதன்படி முதல் கட்டமாக வரும் 11 ஆம் தேதி திருவனந்தபுரத்தில் இருந்து பெங்களூருவுக்கு பஸ் போக்குவரத்து தொடங்குகிறது. 12 ஆம் தேதி முதல் கோழிக்கோடு, காசர்கோடு பகுதிகளில் இருந்து பஸ் போக்குவரத்து தொடங்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.