கல்வி நிறுவனங்கள் பெயரில் இருக்கும் மதப்பெயரை நீக்கும் திட்டம் மத்திய அரசிடம் கிடையாது

கல்வி நிறுவனங்களின் பெயரில் இருக்கும் மதப்பெயரை நீக்கும் திட்டம் மத்திய அரசிடம் கிடையாது என பிரகாஷ் ஜவதேகர் கூறிஉள்ளார்.
கல்வி நிறுவனங்கள் பெயரில் இருக்கும் மதப்பெயரை நீக்கும் திட்டம் மத்திய அரசிடம் கிடையாது
Published on

புதுடெல்லி,

மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பல்கலைக்கழகங்களில் நடைபெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தவும், தணிக்கை செய்து பரிந்துரைகளை முன்வைக்கவும் பல்கலைக்கழக மானியக்குழு சார்பில் உயர்மட்டக்குழு ஏப்ரல் 25-ல் அமைக்கப்பட்டது.

பல்கலைக்கழக மானியக்குழுவின் உயர்மட்ட குழு, அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம், பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், புதுச்சேரி பல்கலைக்கழகம் உள்ளிட்ட 10 பல்கலைக்கழங்களில் ஆய்வு மேற்கொண்டது. இது தொடர்பான பல்வேறு பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை சமர்பித்து உள்ளது. அறிக்கையில் முக்கிய அம்சமாக பல்கலைக்கழகங்களின் பெயரில் இருக்கும் மதப்பெயரை நீக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக பனாரஸ் மற்றும் அலிகார் பல்கலைக்கழகங்களின் பெயரில் இருக்கும் முறையே இந்து, முஸ்லிம் என்ற வார்த்தைகளை நீக்க வேண்டும் என கூறப்பட்டு இருக்கிறது.

அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம், அலிகார் பல்கலைக்கழகம் என அழைக்கப்பட வேண்டும் அல்லது பல்கலைக்கழகத்தை நிறுவிய சர் சையது அகமது கான் பெயரில் பல்கலைக்கழகம் அழைக்கப்பட வேண்டும் என பரிந்துரை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் விவகாரத்திலும் இதையே பரிந்துரை செய்து உள்ளது என தகவல் வெளியாகியது.

மத்திய நிதியுதவி பெறும் பல்கலைக்கழகங்கள் அனைத்தும் மதசார்பற்ற நிறுவனங்கள் ஆகும். ஆனால் அவற்றின் பெயரில் இதுபோன்ற மதப்பெயர்களை இடம்பெற்று இருப்பது மதசார்பற்ற தன்மையை பிரதிபலிக்கவில்லை என்று குறிப்பிடப்பட்டது.

இந்நிலையில் கல்வி நிறுவனங்களின் பெயரில் இருக்கும் மதப்பெயரை நீக்கும் திட்டம் மத்திய அரசிடம் கிடையாது என பிரகாஷ் ஜவதேகர் கூறிஉள்ளார்.

ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்து பேசிய மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவதேகர், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் மற்றும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்றும் எந்தஒரு முடிவும் எடுக்கப்படவில்லை, என கூறிஉள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com