கோலார் அரசு ஆஸ்பத்திரியில் ஆண் குழந்தையை கடத்திய தமிழக பெண் அதிரடி கைது

கோலார் அரசு ஆஸ்பத்திரியில் ஆண் குழந்தையை கடத்திய தமிழக பெண்ணை 6 மணி நேரத்தில் கைது செய்து போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கோலார் அரசு ஆஸ்பத்திரியில் ஆண் குழந்தையை கடத்திய தமிழக பெண் அதிரடி கைது
Published on

கோலார் தங்கவயல்-

கோலார் அரசு ஆஸ்பத்திரியில் ஆண் குழந்தையை கடத்திய தமிழக பெண்ணை 6 மணி நேரத்தில் கைது செய்து போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

குழந்தை கடத்தல்

கோலார் மாவட்டம் மாலூர் டவுனை சேர்ந்தவர் பூவரசன். இவரது மனைவி நந்தினி. 7 மாத கர்ப்பிணியாக இருந்த நந்தினிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் அவர் கடந்த ஆகஸ்டு மாதம் 21-ந்தேதி கோலார் டவுன் எஸ்.என்.ஆர். அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அன்றைய தினம் மாலை 6 மணிக்கு அவருக்கு குறை பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது.

இதனால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தீவிர சிகிச்சைக்கு பிறகு கடந்த 7 நாட்களுக்கு முன்பு குழந்தை சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டது. இதனால் சாதாரண வார்டில் நந்தினிக்கும், குழந்தைக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. நந்தினியுடன் அவரது தாய் ராதம்மா தங்கி இருந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை நந்தினி குழந்தையை தனது அருகில் படுக்க வைத்து தூங்கி கொண்டிருந்தார். ராதம்மா கழிவறைக்கு சென்றிருந்தார். அந்த சமயத்தில், அங்கு வந்த 3 பெண்கள் நந்தினி அருகில் படுத்திருந்த குழந்தையை கடத்தி பேக்கில் வைத்து தூக்கி சென்றனர்.

தனிப்படைகள் அமைப்பு

இதனை அறிந்ததும் நந்தினியும், அவரது தாய் ராதம்மாவும் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர். இதுகுறித்த புகாரின்பேரில் கோலார் டவுன் போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில், 3 பெண்கள் குழந்தையை கடத்தி பேக்கில் வைத்து கடத்தி சென்றது பதிவாகி இருந்தது.

இதுகுறித்து கோலார் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த சம்பவம் குறித்து அறிந்ததும் போலீஸ் சூப்பிரண்டு நாராயணா அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தார். பின்னர் அவர், அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினார். இதையடுத்து குழந்தையை கடத்திய கும்பலை பிடிக்க துணை போலீஸ் சூப்பிரண்டு மல்லேஷ் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார், கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

பெண் கைது

இந்த நிலையில் குழந்தையை கடத்திய கும்பல் கோலாரில் இருந்து தமிழ்நாடு கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் செல்லும் பஸ்சில் ஏறி சென்றது தெரியவந்தது. மேலும் குழந்தை கடத்தல் கும்பல் ஓசூர் அருகே பேரிகை பகுதியில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் பேரிகை பகுதிக்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள், குழந்தையை கடத்திய பெண்ணை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ஆண் குழந்தையை மீட்டனர்.

விசாரணையில், கைதானவர் பேரிகையை சேர்ந்த சுவாதி என்பது தெரியவந்தது. இதையடுத்து மீட்கப்பட்ட குழந்தையுடன், கைதான சுவாதியை அழைத்து கொண்டு போலீசார் கோலாருக்கு வந்தனர்.

6 மணி நேரத்தில் நடவடிக்கை

இதையடுத்து போலீசா மீட்கப்பட்ட குழந்தையை தாய் நந்தினியிடம் ஒப்படைத்தனர். குழந்தையை பறிகொடுத்த சோகத்தில் அழுது, அழுது தோய்ந்து போயிருந்த நந்தினி, குழந்தையை பார்த்ததும் ஆனந்த கண்ணீர் விட்டார். பின்னர் தனது குழந்தையை வாங்கி முத்த மழை பொழிந்து கொஞ்சினார். இது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

குழந்தை கடத்தப்பட்ட 6 மணி நேரத்தில் போலீசார் மீட்டு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 2 பெண்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com