

புதுடெல்லி,
பாகிஸ்தானுடன் 1971-ம் ஆண்டு நடந்த போரில் வெற்றி பெற்றதன் பொன்விழா கொண்டாட்டங்கள் நேற்று நடந்தன. இதில் அப்போதைய பிரதமர் இந்திராகாந்தியை மத்திய அரசும், பிரதமரும் நினைவு கூரவில்லை என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
இது குறித்து கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா தனது டுவிட்டர் தளத்தில், மோடி அரசும், பா.ஜனதாவும் தங்களின் மலிவான மற்றும் அற்ப அரசியலில் இருந்து பின்வாங்காது. வங்காளதேசம் சுதந்திரம் அடைந்த 50-வது வெற்றி தினத்தில், 1971 போரின் இரும்புப்பெண்மணி இந்திரா காந்தியின் பெயரைக் கூட பிரதமரும், அரசில் உள்ளவர்களும் எடுத்துக் கொள்ளாதது அவர்களின் விரக்தி மற்றும் குறுகிய மனப்பான்மைக்கு எடுத்துக்காட்டு என்று கூறியிருந்தார்.
இதைப்போல, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் பெயரை கூட பிரதமரும், அரசும் குறிப்பிடாதது மிகவும் துரதிர்ஷ்டவசமானது என காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான மல்லிகர்ஜூன கார்கே குற்றம் சாட்டினார்.