கொரோனா காலத்தில் வெளிநாட்டு தடுப்பூசிகளை கொள்முதல் செய்யாதது ஏன்? - மத்திய சுகாதாரத்துறை மந்திரி விளக்கம்

கொரோனா காலத்தில் வெளிநாட்டு தடுப்பூசிகளை கொள்முதல் செய்யாதது ஏன் என்பது குறித்து மத்திய சுகாதாரத்துறை மந்திரி விளக்கம் அளித்துள்ளார்.
Image Courtacy: PTI
Image Courtacy: PTI
Published on

புதுடெல்லி,

மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா ஒரு தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது:-

கொரோனா காலத்தில் மாடர்னா, பைசர் போன்ற வெளிநாட்டு நிறுவனங்களின் தடுப்பூசிகளை இந்தியாவுக்குள் வர விடாமல் மத்திய அரசு தடுத்ததாக கூறுவது தவறு.

அந்த நிறுவனங்கள், உரிய தரவுகளுடன் விண்ணப்பித்தபோது, அந்த தடுப்பூசிகளின் அவசரகால பயன்பாட்டுக்கு ஒப்புதல் அளித்தோம். ஆனால், அந்நிறுவனங்கள், இழப்பீட்டு உத்தரவாதமும், சட்ட பாதுகாப்பும் அளிக்குமாறு நிபந்தனை விதித்தன. அதனால், அவற்றை கொள்முதல் செய்யவில்லை.

இந்திய சட்டத்தை பின்பற்ற வேண்டும்

இந்திய தடுப்பூசி நிறுவனங்கள், அந்த கோரிக்கைகளை விடுக்காதபோது, வெளிநாட்டு நிறுவனங்கள் கேட்டது ஏன்? அதே சமயத்தில், 'ஸ்புட்னிக்' தடுப்பூசி தயாரித்த வெளிநாட்டு நிறுவனம், அத்தகைய கோரிக்கைகளை விடுக்காததால், அந்த தடுப்பூசிகளை கொள்முதல் செய்தோம்.

எந்த சர்வதேச நிறுவனமும் இந்தியாவுக்கு வந்து, தங்கள் மருந்துகளையோ, தடுப்பூசிகளையோ விற்கலாம். ஆனால் அவை இந்திய சட்டங்களையும், விதிமுறைகளையும் பின்பற்ற வேண்டும். இந்திய நிறுவனங்களுக்கும், வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் ஒரே விதிமுறையையே நாங்கள் வைத்துள்ளோம்.

சுகாதாரத்துறையில் ஒவ்வொரு நாடும் மற்ற நாட்டுக்கு ஒத்துழைக்க வேண்டும். இந்தியா யாருக்கும் எதிராகவோ, ஆதரவாகவோ இல்லை.

உலகத்தை காப்பாற்றினோம்

இந்தியா போன்ற பெரிய, பன்முகத்தன்மை கொண்ட நாட்டில் கொரோனாவை கட்டுப்படுத்துவது சவாலாக இருந்தது. ஆனால் இந்தியாவின் வெற்றி பயணம், உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாக அமைந்துள்ளது.

தடுப்பூசி ஆராய்ச்சி முதல் ஒப்புதல் வரை அனைத்துக்கும் சர்வதேச நடைமுறைகள் பின்பற்றப்பட்டன. செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் தொழில்நுட்பம் போன்ற நவீன தொழில்நுட்பங்களை நமது விஞ்ஞானிகள் பின்பற்றியதால், விரைவிலேயே தடுப்பூசிகள் சந்தைக்கு வந்தன. நமது தடுப்பூசிகள், உலகத்திலேயே சிறப்பானவை. இந்தியாவை மட்டுமின்றி, பிற நாடுகளையும் காப்பாற்றி உள்ளன என்று அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com