

புதுடெல்லி,
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி பஞ்சாப், அரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் கடந்த மாதம் 26-ந்தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். புராரி மைதானத்திலும், சிங்கு, திக்ரி, காஜிப்பூர் உள்ளிட்ட எல்லைப்பகுதிகளிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதுவரை மத்திய அரசுக்கும், விவசாயிகளுக்கும் இடையே 6 கட்டப் பேச்சுவார்த்தை நடந்தும் எந்த உறுதியான தீர்வும் எட்டப்படவில்லை. போராட்டத்தில் பங்கேற்ற விவசாயிகளில் 50 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இதனிடையே உ,பி, எல்லையில் கடந்த இரு நாட்களுக்கு முன் வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில் விவசாயிகளின் உயிரிழப்புக்கு மத்திய அரசின் புறக்கணிப்பே காரணம் என்று காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 39 நாட்களாக டெல்லியின் எல்லைகளில் நமது விவசாயிகள் கடும் குளிரிலும், மழையில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களின் அவலநிலை என்னையும் அனைத்து மக்களையும் கவலை கொள்ளச் செய்துள்ளது. போராட்டம் நோக்கிய மத்திய அரசின் கடுமையான அணுகுமுறையால், இதுவரை 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். சில விவசாயிகள் தற்கொலை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். ஆனால், விவசாயிகளின் தற்கொலை முடிவைப் பார்த்து மோடி அரசாங்கத்துக்கும் எந்த அமைச்சருக்கும் ஆறுதல் வார்த்தை கூட கூறத் தோன்றவில்லை.
இறந்த அனைத்து விவசாய சகோதரர்களுக்கு என இரங்கல்களையும், அவர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கு மனவலிமையையும் அளிக்க வேண்டும் என பிரார்த்தனை செய்கிறேன். மத்திய அரசின் நிலைப்பாடு ஆணவத்துக்கு ஒப்பானது. ஜனநாயகத்தின் உண்மையானஅர்த்தம் என்பது, விவசாயிகளின், தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதாகும் என்பதை கண்டிப்பாக உணர வேண்டும்.
தேசத்துக்கே உணவு வழங்கும் விவசாயிகளையும், மக்களையும் கண்டுகொள்ளாத சுதந்திரத்துக்கு பின் வந்த முதல் அகங்கார அரசாகப் மத்திய அரசைப் பார்க்கிறேன். விவசாயிகளைச் சோர்வடையச் செய்து, அவர்களை அகற்றுங்கள் என்ற கொள்கையை கடைபிடிக்கிறது தெரிகிறது. ஆனால், விவசாயிகள் உங்கள் முன் பணியமாட்டார்கள். மத்திய அரசு அகம்பாவத்தை விட்டு, வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்று, போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். ஜனநாயகத்தின் உண்மையான அர்த்தம் என்பது விவசாயிகள், தொழிலாளர்களின் நலன்களைக் காப்பதாகும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.