

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில், 2018-19-ம் ஆண்டில் இந்தியாவுக்கு அந்நிய நேரடி முதலீடுகளின் வரவு 6 சதவீதம் அதிகரித்து 6,437 கோடி டாலராக உள்ளது. எதிர்காலங்களிலும் அந்நிய நேரடி முதலீடுகளை அதிகரிக்க அரசு நடவடிக்கையை மேற்கொள்கிறது. குறிப்பாக ஊடகம், அனிமேஷன், விஷுவல் எபெக்ட்ஸ், கேமிங், காமிக்ஸ் (ஏபிஜிசி), காப்பீடு, விமானப் போக்குவரத்து போன்ற துறைகளில் அந்நிய நேரடி முதலீட்டின் விதிமுறைகளை தளர்த்தப் பரிசீலித்து வருகிறோம். இப்போது காப்பீட்டு துறையில் 49 சதவீதம் அந்நிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி உள்ளது. இது 100 சதவீதமாக அதிகரிக்கப்படும்.
சிங்கிள் பிராண்ட் ரீட்டைல் பிரிவில் விதிமுறைகளைத் தளர்த்தவும் பரிசீலிப்போம். ஊடகத்துறையில் நாளேடுகள், வார ஏடுகள் உள்ளிட்டவைகளுக்கு 26 சதவீதம் அந்நிய நேரடி முதலீட்டுக்கு அனுமதிக்கப்படும். இதில் அரசின் அனுமதியுடன் செய்திகள், நடப்பு விவகாரங்களைப் பிரசுரிக்கலாம். வெளிநாட்டு ஊடகங்கள் இந்திய பதிப்புகளும் தொடங்க அனுமதிக்கப்படும். அந்நிய நேரடி முதலீடு இந்தியாவுக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். துறைமுகம், விமான நிலையங்கள், நெடுஞ்சாலை துறை வளர்ச்சிக்கு இது அவசியமாகும் எனக் கூறியுள்ளார்.