சர்க்கரை மொத்த விற்பனையாளர்கள் கையிருப்பு வரம்பை மேலும் குறைத்த மத்திய அரசு

அத்தியாவசிய பொருட்களுக்கான கையிருப்பு தொடர்பாக மத்திய அரசு அவ்வப்போது பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.
சர்க்கரை மொத்த விற்பனையாளர்கள் கையிருப்பு வரம்பை மேலும் குறைத்த மத்திய அரசு
Published on: 

டெல்லி,

மொத்த விற்பனையாளர்கள் வைத்துள்ள சர்க்கரை கையிருப்புக்கான வரம்பை மத்திய அரசு மேலும் குறைத்துள்ளது.

நாட்டில் அத்தியாவசிய பொருட்களுக்கான தேவை மற்றும் அளிப்பை பொருத்து அப்பொருட்களை மொத்த விற்பனையாளர்கள் கையிருப்பாக சேமித்து வைக்க மத்திய அரசின் உணவுத்துறை அவ்வப்போது பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.

சர்க்கரை கையிருப்பு

இதனிடையே, அத்தியாவசிய உணவு பொருட்களில் ஒன்றான சர்க்கரையை நாட்டில் உள்ள மொத்த விற்பனையாளர்கள் கையிருப்பாக சேமித்து வைக்கவும் மத்திய அரசு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.

அதன்படி, நாடு முழுவதும் மொத்த விற்பனையாளர்கள் சர்க்கரையை தலா 2,000 குவிண்டால் அளவுக்கு கையிருப்பாக சேமித்து வைக்க மத்திய அரசு ஏற்கனவே அனுமதி வழங்கியுள்ளது. மேலும், கொள்முதல் ஆன நாளில் இருந்து 30 நாட்கள் வரை மொத்த விற்பனையாளர்கள் சர்க்கரையை கையிருப்பாக வைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது.

உச்சவரம்பில் கட்டுப்பாடு

இந்நிலையில், சர்க்கரை மொத்த விற்பனையாளர்கள் கையிருப்பு வரம்பை மத்திய அரசு மேலும் குறைத்துள்ளது. தீபாவளி, விஜயதசமி போன்ற பண்டிகை காலம் நெருங்கி வரும் நிலையில் சந்தையில் சர்க்கரை தட்டுப்பாட்டை போக்க மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

அதன்படி, நாடு முழுவதும் மொத்த விற்பனையாளர்கள் சர்க்கரையை தலா 1,000 (1 லட்சம் கிலோ) குவிண்டால் வரை மட்டுமே கையிருப்பாக வைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், கொள்முதல் ஆன நாளில் இருந்து 15 நாட்கள் வரை மட்டுமே மொத்த விற்பனையாளர்கள் சர்க்கரையை கையிருப்பாக வைக்க வேண்டும் என்றும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு நவம்பர் 30ம் தேதி வரை அமலில் இருக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த உத்தரவில் இருந்து அசாம், கொல்கத்தாவுக்கு விலக்கு அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com