விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படுமா? நாடாளுமன்றத்தில் மத்திய மந்திரி பதில்

விவசாய கடன்களை தள்ளுபடி செய்வது குறித்த கேள்விக்கு மத்திய மந்திரி பதில் அளித்தார்.
விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படுமா? நாடாளுமன்றத்தில் மத்திய மந்திரி பதில்
Published on

திட்டம் இ்ல்லை

நாடாளுமன்ற மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, விவசாய கடன்கள் ரத்து செய்யப்படுமா? என்று ஒரு உறுப்பினர் கேட்டார். அதற்கு மத்திய நிதித்துறை ராஜாங்க மந்திரி பகவத் காரத் எழுத்து மூலம் பதில் அளித்தார்.

அவர் கூறியதாவது:-

கடந்த 2008-ம் ஆண்டு, விவசாய கடன் தள்ளுபடி மற்றும் கடன் நிவாரண திட்டம் அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு, விவசாய கடன் தள்ளுபடி திட்டம் எதையும் மத்திய அரசு கொண்டுவரவில்லை.எனவே, எஸ்.சி., எஸ்.டி. பிரிவு விவசாயிகள் உள்பட எந்த விவசாயிகளுக்கும் கடன் தள்ளுபடி செய்யும் திட்டம், தற்போது மத்திய அரசின் பரிசீலனையில் இல்லை.

சுமையை குறைக்க நடவடிக்கை

அதே சமயத்தில், விவசாயிகளின் கடன் சுமையை குறைக்க மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் எண்ணற்ற நடவடிக்கைகளை எடுத்துள்ளன. உதாரணமாக, ரூ.3 லட்சம் வரையிலான குறுகிய கால பயிர்க்கடன்களுக்கு வட்டி தள்ளுபடி செய்யப்பட்டது.பிணை இல்லாமல் வழங்கப்படும் விவசாய கடன்களின் உச்சவரம்பை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.1 லட்சத்து 60 ஆயிரமாக ரிசர்வ் வங்கி உயர்த்தியது. பிரதமரின் விவசாயிகள் நிதியுதவி திட்டத்தில், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

காப்பீட்டு நிறுவனம் தனியார்மயம்

மக்களவையில், பொது காப்பீட்டு வர்த்தக (தேசியமயம்) திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. நடப்பு நிதியாண்டில், 2 தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளும், ஒரு பொது காப்பீட்டு நிறுவனமும் தனியார்மயமாக்கப்படும் என்று மத்திய பட் ஜெட்டில் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதற்கேற்ப இம்மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.இதன்படி, ஒரு குறிப்பிட்ட பொது காப்பீட்டு நிறுவனத்தில் 51 சதவீதத்துக்கு குறையாத பங்கு மூலதனத்தை மத்திய அரசு வைத்திருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு நீக்கப்படுகிறது. இதன்மூலம் தனியாருக்கு பங்குகள் விற்கப்படும்.பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களில் தனியார் பங்களிப்பை ஊக்கப்படுத்தவும், பொருளாதாரத்தின் வேகமான வளர்ச்சிக்காகவும் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படுவதாக மசோதாவில் கூறப்பட்டுள்ளது. நாட்டில் தற்போது 4 பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்கள் உள்ளன. அவற்றில் ஏதேனும் ஒன்று தனியார்மயமாக்கப்படும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com