இந்தியா - சீனா எல்லை பதற்றம் : மத்திய அரசு மக்களுக்கு விளக்க வேண்டும் - ராகுல் காந்தி

இந்தியா - சீனா எல்லையில் தற்போதைய சூழ்நிலை குறித்து மத்திய அரசு மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறி உள்ளார்.
இந்தியா - சீனா எல்லை பதற்றம் : மத்திய அரசு மக்களுக்கு விளக்க வேண்டும் - ராகுல் காந்தி
Published on

புதுடெல்லி

இந்தியா மற்றும் சீனாவிற்கு இடையே இந்த மாத துவக்கத்தில் இருந்து பிரச்சினை நிலவி வருகிறது. கடந்த மே 5-ஆம் தேதி லடாக் எல்லையில் சீனாவின் போர் படைகள் அத்துமீறி உள்ளே நுழைந்தது. அதன் பின் சிக்கிம் எல்லையில் சீனாவின் படைகள் அத்து மீறியது.

கடந்த இரண்டு வாரத்தில் மட்டும் கல்வான் பள்ளத்தாக்கு பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட ராணுவ முகாம்களை சீனா அமைத்துள்ளது. சீனாவின் இந்த நடவடிக்கைகள் இரு நாடுகளுக்கு இடையே பதற்றத்தை ஏற்படுத்தி இருப்பதுடன் மட்டுமின்றி, இந்தியாவுக்கு ஆத்திரமூட்டும் வகையிலும் உள்ளது.

சீனாவின் இந்த செயல்களுக்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சீனாவின் இந்த நடவடிக்கைகளை தொடர்ந்து பிரதமர் மோடி பாதுகாப்பு அமைச்சர், பாதுகாப்பு ஆலோசகர், முப்படைத் தளபதி, ராணுவத் தளபதிகள், உள்துறை செயலாளருடன் கடந்த 26-ம் தேதி அவசர ஆலோசனை நடத்தியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கிடையே, இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான லடாக் எல்லைப் பிரச்சினையில் சமரசம் செய்ய தயார் என்றும் இருநாடுகளும் ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் சமரசம் செய்து வைக்க அமெரிக்கா தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில்

சீனாவுடனான எல்லை பிரச்சினை குறித்து மோடி அரசு மவுனம் காத்து வருவது, இத்தகைய நெருக்கடியான நேரத்தில் பல கோணங்களில் யூகத்திற்கும் சந்தேகத்திற்கும் வழிவகுக்கிறது. எனவே இந்தியா - சீனா எல்லையில் தற்போதைய சூழ்நிலை குறித்து மத்திய அரசு மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும்' என வலியுறுத்தி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com