

புதுடெல்லி,
ஆண்டு ஒன்றுக்கு வீடுகளுக்கு 14.2 கிலோ எடையுள்ள 12 சமையல் கியாஸ் சிலிண்டர்கள் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகின்றன. அதற்கு மேல் சமையல் கியாஸ் தேவைப்படுபவர்கள், சந்தை விலையில் வாங்கிக் கொள்ளலாம்.
சமையல் கியாஸ் மானியத்தை படிப்படியாக ரத்து செய்யும்வகையில், அதன் விலையை மாதந்தோறும் சிலிண்டருக்கு ரூ.4 வீதம் உயர்த்திக் கொள்ளலாம் என்று கடந்த ஆண்டு ஜூன் மாதம் மத்திய அரசு அறிவித்தது.
அதையடுத்து, மாதந்தோறும் 1ந் தேதி, கியாஸ் விலை மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு ஜூலை 1ந் தேதியில் இருந்து 19 தவணைகளாக இதுவரை மொத்தம் ரூ.76.50 விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில், மாதந்தோறும் மானிய விலை சமையல் கியாஸ் விலையை உயர்த்தும் முடிவை மத்திய அரசு வாபஸ் பெற்றுள்ளது.
அக்டோபர் மாதத்துக்கு பின்னர் நவம்பர், டிசம்பர் மாதங்களில் சிலிண்டரின் விலை உயர்த்தப்படவில்லை என்று ஹிந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும் வரி காரணமாக மட்டுமே சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டதாகவும் எண்ணைய் நிறுவன வட்டாரங்கள் தெரிவித்தன.