உள்நாட்டு பாதுகாப்பை வலுப்படுத்த காலத்துக்கு ஏற்றவகையில் சட்டங்கள் திருத்தப்படும் - அமித்ஷா தகவல்

உள்நாட்டு பாதுகாப்பை வலுப்படுத்த காலத்துக்கு ஏற்றவகையில் சட்டங்கள் திருத்தப்படும் என்று அமித்ஷா தெரிவித்தார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

டெல்லி காவல்துறை தொடங்கப்பட்டு 76 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, நேற்று டெல்லி போலீசின் 76-வது நிறுவன தின நிகழ்ச்சி நடந்தது. அதில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டார். அங்கு அவர் பேசியதாவது:- கடந்த 2014-ம் ஆண்டில் இருந்து உள்நாட்டு பாதுகாப்பு கணிசமாக அதிகரித்துள்ளது. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த பிறகு, அங்கு பயங்கரவாதம் கட்டுப்பாட்டில் உள்ளது. பயங்கரவாத சம்பவங்கள் குறைந்துள்ளன. கல் எறியும் சம்பவங்கள் குறைந்துள்ளன. அங்கு சுற்றுலா பயணிகள் செல்ல தொடங்கி விட்டனர்.

உள்நாட்டு பாதுகாப்பை மேலும் வலுப்படுத்த இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம், சாட்சியங்கள் சட்டம் ஆகியவற்றில் திருத்தம் கொண்டுவரப்படும். தற்காலத்துக்கு ஏற்றவகையில் அந்த சட்டங்கள் திருத்தப்படும்.

குற்ற புலனாய்வில் தடயவியல் விசாரணை முக்கிய பங்கு வகிக்கிறது. நாடு முழுவதும் தடயவியல் கட்டமைப்பு அதிகரிக்கப்படும். அதற்காக 6 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை விதிக்கத்தக்க குற்ற சம்பவங்களின்போது தடயவியல் குழுக்கள் நேரில் செல்வதை கட்டாயமாக்க போகிறோம்.

டெல்லியில் பாஸ்போர்ட் சரிபார்ப்பு பணி தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை 15 நாட்கள் ஆகும் இப்பணி, இனிமேல் 5 நாட்களில் முடிந்து விடும். டெல்லியில் ஜி20 மாநாட்டு நிகழ்ச்சிகளுக்கு சர்வதேச பிரதிநிதிகள் வருவதால், போலீசார் உஷாராக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com