அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பு: அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? பியூஸ் கோயல் விளக்கம்


அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பு: அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? பியூஸ் கோயல் விளக்கம்
x

ஏற்றுமதியாளர்கள் எந்த பாதிப்பும் சந்திக்காத வகையில் நடவடிக்கைகளை எடுக்க அரசு உறுதியாக உள்ளது என்று பியூஸ் கோயல் கூறினார்.

புதுடெல்லி,

உலக நாடுகளுக்கு அதிக வரி விதித்து வரும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இந்தியாவுக்கு 25 சதவீத வரியை விதித்தார். அதுடன், உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால், கூடுதலாக 25 சதவீத வரியை டிரம்ப் அறிவித்தார். அதன்படி, இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு மொத்தமாக 50 சதவீத வரி விதிக்கப்பட்டது.

இந்த வரி விதிப்பு கடந்த 27-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. ஆனால், வர்த்தக வரி விதிப்பு தொடர்பாக அமெரிக்காவின் நிர்பந்தத்திற்கு அடிபணிய மாட்டோம். எவ்வளவு நெருக்கடிகள் வந்தாலும் இந்திய விவசாயிகள், சிறு வணிகர்களை பாதிக்க விட மாட்டேன் என்று பிரதமர் மோடி திட்டவட்டமாக கூறிவிட்டார்.

அமெரிக்காவின் வரி விதிப்பால் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு பாதிப்பு ஏற்படும். அதை சரிகட்ட பல்வேறு திட்டங்களை மத்திய அரசு எடுத்து வருகிறது. அமெரிக்காவின் வரி விதிப்பால் திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள் கடும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளன. அதேபோல், பல்வேறு துறைகளின் ஏற்றுமதியும் பாதிக்கப்படும் சூழல் உள்ள நிலையில் ஏற்றுமதியை அதிகரிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய வர்த்தகத்துறை மந்திரி பியூஷ் கோயல் கூறியுள்ளார்.

இது தொடர்பாக பியூஷ் கோயல் கூறுகையில், “ஏற்றுமதியாளர்கள் எந்த பாதிப்பும் சந்திக்காத வகையில் நடவடிக்கைகளை எடுக்க அரசு உறுதியாக உள்ளது. வணிக அமைச்சகத்தில் உள்ள நாங்கள், எங்கள் பணிகள் மூலம், உலகின் பிற பகுதிகளை அடைந்து, கைப்பற்றக்கூடிய பிற வாய்ப்புகளைப் பார்க்கிறோம்.

உள்நாட்டு நுகர்வை அதிகரிப்பதையும் நாங்கள் பரிசீலித்து வருகிறோம். எனவே, இந்த மாற்றங்களின் தாக்கத்தை விரைவாக நம்மால் உணர முடியும். மேலும் இது முழு உள்நாட்டு உற்பத்தித் துறைக்கும் விரைவான தேவையை அதிகரிக்கும். சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடன் அரசு பேசி வருகிறது. ஏற்றுமதியை பரவலாக்குவதற்காக வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள் வாயிலாகவும் ஆலோசனை நடைபெறுகிறது” என்றார்.

1 More update

Next Story