ராஷ்மிகா மந்தனா போலி வீடியோ - மத்திய அரசு எச்சரிக்கை

போலி வீடியோ தொடர்பாக சமூக வலைதள நிறுவனங்களுக்கும் மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ராஷ்மிகா மந்தனா போலி வீடியோ - மத்திய அரசு எச்சரிக்கை
Published on

புதுடெல்லி,

தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம் என பல மொழிகளில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் ராஷ்மிகா மந்தனா. கார்த்தி நடித்த சுல்தான், விஜய் நடித்த வாரிசு உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்து உள்ளார். நாடு முழுவதும் ஏராளமான ரசிகர்களை கொண்டிருக்கும் ராஷ்மிகா மந்தனாவின் போலி வீடியோ ஒன்று கடந்த சில நாட்களாக டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இங்கிலாந்து வாழ் இந்தியப் பெண்மணியான ஜாரா படேல் என்பவர் இன்ஸ்டாகிராமில் புகழ் பெற்றவர். 4 லட்சத்துக்கும் அதிகமானோர் அவரை இன்ஸ்டாகிராமில் பின்தொடர்பவர்களாக இருக்கின்றனர். அவர் கடந்த அக்டோபர் 9ஆம் தேதி தனது வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். தற்போது அந்த வீடியோவில் அவரது முகத்தை மாற்றிவிட்டு அதற்கு பதிலாக நடிகை ராஷ்மிகா மந்தானாவின் முகத்தை வைத்து போலியாக உருவாக்கியுள்ளனர். இந்த வீடியோ வைரலான நிலையில், போலி வீடியோ பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர் எச்சரிக்கை விடுத்தார்.

இந்தநிலையில், போலியாக வீடியோ சித்தரித்து வெளியிட்டால் 3 ஆண்டுகள் சிறை தண்டனையுடன் ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நடிகை ராஷ்மிகா மந்தனா குறித்த தவறான வீடியோ வெளியாகி சர்ச்சையான நிலையில் மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் போலி வீடியோ தொடர்பாக சமூக வலைதள நிறுவனங்களுக்கும் மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதற்கிடையே, இந்த சம்பவம் குறித்து இங்கிலாந்து வாழ் இந்திய பெண்மணி ஜாரா படேல் இன்ஸ்டாவில் கூறுகையில்,

"அனைவருக்கும் வணக்கம், யாரோ ஒருவர் எனது உடலையும், பிரபல பாலிவுட் நடிகையின் முகத்தையும் பயன்படுத்தி டீப் பேக் வீடியோவை உருவாக்கியது எனது கவனத்திற்கு வந்துள்ளது. அந்த டீப் பேக் வீடியோவும் எனக்கு எந்த தொடர்பும் இல்லை, மேலும் என்ன நடக்கிறது என்பதைக் கண்டு நான் மிகவும் வருத்தமடைந்துள்ளேன்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com