ஜனாதிபதி மாளிகையில் ஜப்பான் பிரதமருக்கு சிறப்பான வரவேற்பு

டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்கு இன்று வருகை தந்த சனே தகாய்ச்சிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஜனாதிபதி மாளிகையில் ஜப்பான் பிரதமருக்கு சிறப்பான வரவேற்பு
Published on

புதுடெல்லி

ஜப்பான் பிரதமராக கடந்த ஆண்டு பதவியேற்ற சனே தகாய்ச்சி 3 நாட்கள் சுற்றுப்பயணமாக இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார். இதற்காக இந்தியாவின் தலைநகர் புதுடெல்லிக்கு கடந்த 1-ந்தேதி(நேற்று) வருகை தந்த சனே தகாய்ச்சியை, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை இணை மந்திரி ஜிதேந்திர சிங் விமான நிலையத்தில் நேரில் வரவேற்றார்.

கடந்த ஆண்டு பதவியேற்ற பின்னர் தகாய்ச்சி மேற்கொள்ளும் முதல் இந்திய பயணம் இதுவாகும். இந்த பயணத்தில் பிரதமர் மோடியை சந்தித்து இரு நாடுகளின் இருதரப்பு உறவுகள் பற்றி அவர் பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார்.

ஏ.ஐ.யில் ஒத்துழைப்பு

பொருளாதார உறவுகளை வலுப்படுத்துதல், குறைகடத்திகளுக்கான உறுதியான விநியோக சங்கிலிகளை மேம்படுத்துதல் மற்றும் செயற்கை நுண்ணறிவில் (ஏ.ஐ.) ஒத்துழைப்பை உறுதிப்படுத்துதல் ஆகிய விஷயங்கள் அவருடைய இந்திய பயணத்தின் முக்கிய நோக்கங்களாக இருக்கும். மேலும் டெல்லியில் நடைபெறும் 16-வது இந்திய-ஜப்பான் வருடாந்திர உச்சிமாநாட்டில் அவர் பங்கேற்க உள்ளார்.

ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு

இந்நிலையில், டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்கு இன்று வருகை தந்த சனே தகாய்ச்சிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. முப்படைகளைச் சேர்ந்த அணிவகுப்புக் குழுக்கள் மற்றும் இசைக்குழுக்கள் சார்பில் ஜப்பான் பிரதமருக்கு மரியாதை நிமித்தமான அணிவகுப்புடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் பிரதமர் மோடியும் கலந்து கொண்டு ஜப்பான் பிரதமரை வரவேற்றார். தொடர்ந்து இன்று நடைபெற உள்ள உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியும், தகாய்ச்சியும் கலந்து கொண்டு பேசுகின்றனர். இந்த உச்சிமாநாட்டு நிகழ்ச்சிக்கு பின்னர், தலைவர்கள் இருவரும், பொருளாதார பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பாக கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com