செம்மொழிகள் மேம்பாட்டில் தமிழ் மொழிக்கு அதிக நிதி ஒதுக்கீடு - மத்திய அரசு தகவல்

தமிழ், சமஸ்கிருதம், கன்னடம் உள்ளிட்ட 6 இந்திய மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

தொன்மை மொழிகளின் ஊக்குவிப்பு பற்றி மக்களவையில் உறுப்பினர் ஒருவர் கேட்ட கேள்விக்கு மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத்துறை மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத் நேற்று எழுத்துப்பூர்வமாக பதில் அளித்து இருந்தார்.

அந்த பதிலில் கூறப்பட்டு இருந்ததாவது:-

தமிழ், சமஸ்கிருதம், கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஒடியா ஆகிய 6 இந்திய மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இதில் முதன்முதலாக 12-10-2004 அன்று தமிழ் மொழிக்கும், 25-11-2005 அன்று சமஸ்கிருதத்துக்கும், 31-10-2008 அன்று கன்னடம் மற்றும் தெலுங்குக்கும், 8-8-2013 அன்று மலையாளத்துக்கும், 11-3-2014 அன்று ஒடியா மொழிக்கும் செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டது.

செம்மொழிகள் உள்பட அனைத்து இந்திய மொழிகளையும் மேம்படுத்துவதே அரசின் கொள்கை. தேசிய கல்விக்கொள்கை-2020 அனைத்து இந்திய மொழிகளையும் மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. இந்திய மொழிகளின் மத்திய நிறுவனம் கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஒடியா ஆகிய 4 செம்மொழிகள் உள்பட அனைத்து இந்திய மொழிகளின் மேம்பாட்டுக்காக செயல்படுகிறது. தமிழ் மொழியின் மேம்பாடு செம்மொழித் தமிழின் மத்திய நிறுவனத்தால் செய்யப்படுகிறது.

சமஸ்கிருத மொழி, 3 மத்திய பல்கலைக்கழகங்கள் மூலம் மேம்படுத்தப்படுகிறது. இந்த பல்கலைக்கழகங்களுக்கு சமஸ்கிருத மொழியில் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சிக்காக நிதி வழங்கப்படுகிறது. சமஸ்கிருதத்தின் தொன்மை அம்சம் தொடர்பான எந்த பணியையும் மேற்கொள்வதற்கு தனி நிதி வழங்கப்படவில்லை.

கடந்த 10 ஆண்டுகளில் செம்மொழி தமிழின் மேம்பாட்டுக்கு ரூ.51 கோடியும், தெலுங்கு மொழிக்கு ரூ.11.83 கோடியும், கன்னடத்துக்கு ரூ.11.46 கோடியும், ஒடியா மொழிக்கு ரூ.3.81 கோடியும், மலையாளத்துக்கு ரூ.3.71 கோடியும் ஒதுக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு பதில் கூறப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com