திருமண நிகழ்ச்சியில் நடனம் ஆடிய மணமகனின் தோழர் திடீர் மரணம்

மத்திய பிரதேசத்தில் திருமண நிகழ்ச்சியில் நடனம் ஆடிய மணமகனின் தோழர், மயங்கி விழுந்து மரணம் அடைந்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
திருமண நிகழ்ச்சியில் நடனம் ஆடிய மணமகனின் தோழர் திடீர் மரணம்
Published on

ரேவா,

மத்திய பிரதேசத்தின் ரேவா மாவட்டத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்று நடக்க முடிவானது. இதன்படி, ரேவா நகரை சேர்ந்த மணமகளுக்கும், உத்தர பிரதேசத்தின் கான்பூர் நகரை சேர்ந்த மணமகனுக்கும் இடையே நடைபெற இருந்த திருமண நிகழ்வில் கலந்து கொள்ள உறவினர்கள், நண்பர்கள் திரளாக வந்திருந்தனர்.

இதில் மணமகனின் தோழர் அபய் சச்சான் (வயது 32) என்பவரும் வந்துள்ளார். இவருடன் மற்ற நண்பர்களும் சேர்ந்து கொண்டு செவ்வாய் கிழமை இரவில் திருமண ஊர்வலத்தில் இசைக்கேற்ப நடனம் ஆடியபடியே சென்றனர்.

கடுமையான குளிரில் மற்ற நண்பர்களுடன் ஆடி கொண்டு சென்ற சச்சான் திடீரென மயங்கி விழுந்து உள்ளார். இதனால், இசை கச்சேரி நிறுத்தப்பட்டது. அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக அருகே இருந்தவர்கள் அவரை தூக்கி கொண்டு சஞ்சய் காந்தி நினைவு மருத்துவமனைக்கு சென்றனர். எனினும், அவர் உயிரிழந்து விட்டார் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இருக்க கூடும் என கூறப்படுகிறது.

சச்சான், கான்பூர் நகரின் ஹன்ஸ்புரம் பகுதியை சேர்ந்தவர். இளம் வயதில் மணமகனின் தோழர் ஒருவர் திருமண கொண்டாட்டத்தில் நடனம் ஆடியபோது, உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com