‘பள்ளிகளில் உடனடியாக நேரடி வகுப்புகளை தொடங்க வேண்டும்’ - மருத்துவ நிபுணர்கள், கல்வியாளர்கள் வலியுறுத்தல்

பள்ளிகளில் உடனடியாக நேரடி வகுப்புகளை தொடங்க வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள், கல்வியாளர்கள், மத்திய அரசுக்கு வலியுறுத்தி உள்ளனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

பள்ளிகளில் உடனடியாக நேரடி வகுப்புகளை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கையை மருத்துவ நிபுணர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்ட பல்துறை வல்லுனர்கள் மத்திய அரசிடம் வலியுறுத்தி உள்ளனர்.

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா வைரஸ் பரவலைத்தடுக்க ஊரடங்கு போடப்பட்டபோது பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டன. பின்னர் சில மாநிலங்களில் பகுதியளவில் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன.

ஆனால் கொரோனா 2-வது அலை தலை விரித்தாடத்தொடங்கியபோது அவை மூடப்பட்டன. இதனால் மாணவ, மாணவிகள் ஆன்லைன் கல்வி என்ற கட்டாயத்துக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். இப்போது கொரோனா 2-வது அலை முடிவுக்கு வருகிற நிலை உள்ளது.

இந்தநிலையில் மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா, கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர் ஆகியோருக்கு 56 கல்வியாளர்கள், மருத்துவ நிபுணர்கள், பல்துறை வல்லுனர்களைக் கொண்ட குழுவினர் ஒரு கடிதம் எழுதி உள்ளனர்.

அந்த கடிதத்தில் அவர்கள் உடனடியாக பள்ளிக்கூடங்களில் நேரடி வகுப்புகளை தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

மேலும் அந்த கடிதத்தில், பல மாநில அரசுகள் அனைத்து வகுப்புகளுக்கும் இன்னும் பள்ளிக்கூடங்களை திறக்கவில்லை. இதற்கு மாணவ, மாணவிகள் தடுப்பூசி போடவில்லை, பள்ளிகள் கொரோனாவை தீவிரமாக பரப்பலாம், 3-வது அலை தாக்கலாம், பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்ட பகுதிகளில் தொற்று அதிகரித்துள்ளது என பல காரணங்களை கூறுகிறார்கள்.

ஆனால் உலகளவில் ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிக்கூடங்களை திறக்காமல் இருக்கிற 4 அல்லது 5 நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது. பள்ளிக்கூடங்கள் திறப்புக்கு ஆதரவாக உலகளாவிய சான்றுகள் உள்ளன. எனவே பள்ளிக்கூடங்களை உடனடியாக திறந்து நேரடி வகுப்புகளை தொடங்குவதற்கு அரசு பரிசீலிக்க வேண்டும்.

குழந்தைகளை மீண்டும் பள்ளிகளுக்கு வர வைக்க வேண்டிய அவசர தேவை உள்ளது. குழந்தைகளுக்கு கொரோனா ஆபத்து குறைவாகவே உள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வழிகாட்டுதல்கள்படி முதலில் தொடக்கப்பள்ளிகளை திறப்பதற்கு அனுமதிக்க வேண்டும். குழந்தைகளின் நலனை முன்னிட்டு இதில் அரசியல் கட்சி தலைவர்கள் ஒன்றுபட வேண்டும்.

பள்ளிக்கூடங்களை திறப்பதற்கு தடுப்பூசி போட வேண்டும் என்பதை முன்நிபந்தனையாக வைக்கக்கூடாது. தடுப்பூசியின் நோக்கமே தீவிர பாதிப்பையும், இறப்பையும் தடுப்பதுதான். பெரியவர்களுடன் ஒப்பிடுகையில் குழந்தைகள் தீவிர பாதிப்புக்குள்ளாவதும், இறப்பதுவும் மிகவும் குறைவுதான் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com