பிப்ரவரி மாதத்தில் ஜி.எஸ்.டி. ரூ.1.84 லட்சம் கோடி வசூல்

நடப்பாண்டு பிப்ரவரி மாதத்தில் மட்டும் ரூ.1.84 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலாகி உள்ளதாக நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் பிப்ரவரி மாதம் சரக்கு-சேவை வரி (ஜி.எஸ்.டி.) ரூ.1.84 லட்சம் கோடி வசூலாகி உள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரியில் கிடைக்க பெற்ற மொத்த ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.1.68 லட்சம் கோடியாகும். இது இந்த ஆண்டு 9.1 சதவீதம் அதிகமாகும். கடந்த மாதத்தில் மத்திய ஜி.எஸ்.டி. வசூல் ரூ.35 ஆயிரத்து 204 கோடி. மாநில ஜி.எஸ்.டி. ரூ.43 ஆயிரத்து 704 கோடி, ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. ரூ.90 ஆயிரத்து 870 கோடி, இழப்பீட்டு வரி ரூ.13 ஆயிரத்து 868 கோடி.
உள்நாட்டு வருவாய் மூலம் ரூ.1.42 லட்சம் கோடியும், இறக்குமதி வருவாய் மூலம் ரூ.42 ஆயிரத்து 702 கோடியும் கிடைக்க பெற்றுள்ளது. பிப்ரவரியில் திருப்பி அளிக்கப்பட்ட மொத்த தொகை ரூ.20 ஆயிரத்து 889 கோடி. முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தை ஒப்பிடுகையில் இது 17.3 சதவீதம் அதிகம்.
கடந்த ஜனவரியில் வசூலான ஜி.எஸ்.டி. ரூ.1.96 லட்சம் கோடி. இது ஜி.எஸ்.டி. அமல் ஆனதில் இருந்து கிடைக்கப்பெற்ற இரண்டாவது அதிகபட்ச வருவாயாகும். அதேநேரம், பிப்ரவரியில் ஜி.எஸ்.டி. வசூல் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ரூ.2.10 லட்சம் கோடி வசூல் ஆனது இதுவரை அதிகபட்ச வருவாயாக உள்ளது.






