வீடுகளுக்கு ஜி.எஸ்.டி. குறைப்பு - மத்திய அரசு நடவடிக்கை

வீடுகளுக்கு ஜி.எஸ்.டி.யை குறைக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
வீடுகளுக்கு ஜி.எஸ்.டி. குறைப்பு - மத்திய அரசு நடவடிக்கை
Published on

புதுடெல்லி,

கட்டி முடிக்கப்படாத வீடுகளுக்கான ஜி.எஸ்.டி.யை 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகவும், குறைந்த விலை வீடுகளுக்கான ஜி.எஸ்.டி.யை ஒரு சதவீதமாகவும் குறைக்க ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

ஜி.எஸ்.டி. (சரக்கு, சேவை வரி) விகிதங்களை அவ்வப்போது மாற்றி அமைப்பது பற்றி ஆராய மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தலைமையில் மாநில நிதி மந்திரிகள் அடங்கிய ஜி.எஸ்.டி. கவுன்சில் செயல்பட்டு வருகிறது.

ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம், நேற்று டெல்லியில் நடைபெற்றது. அருண் ஜெட்லி தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில், ரியல் எஸ்டேட் துறைக்கும், வீடு வாங்குவோருக்கும் ஊக்கம் அளிக்கும் வகையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

அதன்படி, கட்டுமான பணி நடந்து வரும் நிலையில் உள்ள வீடுகளுக்கான ஜி.எஸ்.டி., 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்படுகிறது. ஆனால், இதற்கு உள்ளட்டு வரி பயன் கிடையாது.

இதுபோல், குறைந்த விலை வீடுகளுக்கான ஜி.எஸ்.டி., 8 சதவீதத்தில் இருந்து ஒரு சதவீதமாக குறைக்கப்படுகிறது. இதற்கும் உள்ளட்டு வரி பயன் கிடையாது. இந்த வரி குறைப்பு, ஏப்ரல் 1-ந் தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது.

மேலும், குறைந்த விலை வீடுகளுக்கான விலை வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுவரை, ரூ.20 லட்சம் மதிப்புள்ள வீடுகளே குறைந்த விலை வீடுகள் என்று கருதப்பட்டது. இனிமேல், மெட்ரோ நகரங்களிலும், பிற நகரங்களிலும் ரூ.45 லட்சம் வரையுள்ள வீடுகள் குறைந்த விலை வீடுகளாக கருதப்படும்.

அதே சமயத்தில், மெட்ரோ நகரங்களாக இருந்தால் 60 சதுர மீட்டர் பரப்பளவு வரை கொண்ட வீடுகளும், பிற நகரங்களாக இருந்தால் 90 சதுர மீட்டர் பரப்பளவு வரை கொண்ட வீடுகளும் குறைந்த விலை வீடுகளாக கருதப்படும்.

சென்னை, பெங்களூரு, டெல்லி தேசிய தலைநகர் பிராந்தியம், ஐதராபாத், கொல்கத்தா, மும்பை ஆகியவை மெட்ரோ நகரங்கள் ஆகும்.

லாட்டரிகள் மீதான ஜி.எஸ்.டி.யை மாற்றி அமைப்பது பற்றி இந்த கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இதுபற்றி மந்திரிகள் குழு ஆலோசனை நடத்தும் என்று முடிவு செய்யப்பட்டது.

இந்த தகவல்களை மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி நிருபர்களிடம் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், இந்த முடிவு, கட்டுமான துறைக்கு ஊக்கம் அளிக்கும். குறைந்த விலை வீடுகளுக்கான விலை வரம்பு உயர்த்தப்பட்டு இருப்பதால், வீடு வாங்குவோர் இன்னும் தரமான வீடுகளை வாங்க முடியும் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com