அச்சு ஊடகங்களுக்கான காகிதம் மீதான ஜி.எஸ்.டி. வரி ரத்து - பிரதமர் மோடிக்கு சித்தராமையா கடிதம்

அச்சு ஊடகங்கள் பயன்படுத்தும் காகிதம் மீதான ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி பிரதமர் மோடிக்கு சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார்.
அச்சு ஊடகங்களுக்கான காகிதம் மீதான ஜி.எஸ்.டி. வரி ரத்து - பிரதமர் மோடிக்கு சித்தராமையா கடிதம்
Published on

பெங்களூரு,

பிரதமர் மோடிக்கு கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

ஜனநாயகத்தின் 4-வது தூண் ஊடகம். ஊடகங்களில் அச்சு ஊடகம் முதன்மையானது. அந்த அச்சு ஊடகம் சந்தித்து வரும் பிரச்சினைகளை தீர்க்க வேண்டியது அரசின் கடமை. அப்போது தான் அவை மக்களின் குரலாக தொடர்ந்து செயல்பட முடியும்.

அரசு கொண்டு வந்துள்ள பல்வேறு புதிய கொள்கைகளால் அவை தொடர்ந்து செயல்படுவது பாதிக்கப்பட்டுள்ளது. ஆர்.என்.ஐ. அனுமதி பெற்றுள்ள அச்சு ஊடகங்கள் பயன்படுத்தும் காகிகதத்தின் மீதான ஜி.எஸ்.டி. வரி 5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. அனுமதி பெறாத அச்சு ஊடகங்களுக்கான காகிதம் மீது வரி 12 சதவீதமாக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.

இதனால் செய்தித்தாள்களின் விலையை உயர்த்த வேண்டிய நிலைக்கு அச்சு ஊடகங்கள் தள்ளப்பட்டுள்ளன. மேலும் நிதி நெருக்கடியிலும் அவை சிக்கியுள்ளன. தொழிலாளர்கள் தட்டுப்பாடு, கச்சா பொருட்களின் விலை உயாவு, பெட்ரோலிய பொருட்களின் விலை உயாவால் செய்தித்தாள்கள் அச்சிடும் செலவு அதிகரித்துள்ளது.

கொரோனா பரவலுக்கு முன்பு ஒரு டன் காகித இறக்குமதி செலவு ரூ.23 ஆயிரமாக இருந்தது. அது தற்போது ஒரு டன் விலை ரூ.60 ஆயிரம் வரை அதிகரித்துள்ளது. நாட்டின் மொத்த காகித தேவையில் 56 சதவீதம் இறக்குமதி செய்யப்படுகிறது. 44 சதவீத காகிதம் மட்டுமே உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகிறது. காகித இறக்குமதியில் பெரும் பகுதி ரஷியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து தான் பெறப்படுகிறது.

தற்போது அங்கு போர் நடந்து வருவதால் காகித இறக்குமதியிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. உள்நாட்டில் செயல்படும் காகித உற்பத்தி நிறுவனங்களுக்கு மத்திய அரசு மானியம் வழங்க வேண்டும். இதன் மூலம் அந்த நிறுவனங்கள் தரமான காகிதங்களை உற்பத்தி செய்ய முடியும். கொரோனா பரவல் காரணமாக பெரும் நிதிச்சுமையால் அச்சு ஊடக நிறுவனங்களின் வருவாய் குறைந்துவிட்டது. சில நிறுவனங்கள் மூடும் நிலையில் உள்ளன.

அதனால் உரிய சீர்திருத்தங்கள் மூலம் இந்த 4-வது தூணான அச்சு ஊடகங்களை காப்பாற்ற வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உள்ளது. அதனால் அச்சு ஊடகங்கள் பயன்படுத்தும் காகிதங்கள் மீதான ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வேண்டும். உள்நாட்டு காகித நிறுவனங்கள் தரமான காகிதங்களை உற்பத்தி செய்ய மானியம் வழங்க வேண்டும்.

இவ்வாறு சித்தராமையா தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com