

மும்பை,
ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் 7 மாதங்களுக்கு பிறகு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று முன்தினம் காணொலி காட்சி வழியாக நடந்தது. இதில் மராட்டியம் சார்பில் துணை முதல்-மந்திரி அஜித்பவார் கலந்துகொண்டார். இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட அம்சங்கள் குறித்து அஜித்பவார் கூறியதாவது:-
ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் தேவையான மருந்துகள், தடுப்பூசிகள், உயிர்காக்கும் கருவிகள் மற்றும் பிற பொருட்களின் மீது வரிவிலக்குள் அளிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. ஜி.ஏஸ்.டி. கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் தடுப்பூசிகள் மற்றும் ஊசி மருந்துகளுக்கு விதிக்கப்பட்ட வரியை மத்திய அரசு குறைக்கவேண்டும் என விருப்பம் தெரிவித்தனர்.
மேலும் மராட்டியத்திற்கு மத்திய அரசு தரவேண்டிய ஜி.எஸ்.டி. இழப்பீட்டு தொகை ரூ.24 ஆயிரம் கோடியை உடனடியாக வழங்கவேண்டும் என வலியுறுத்தினேன்.
இவ்வாறு அவர் கூறினார்.