ஜி.எஸ்.டி. கவுன்சில் இன்று கூடுகிறது: ஏ.சி., சிமெண்டு, டயர் மீதான வரி குறைக்கப்பட வாய்ப்பு - 99 சதவீத பொருட்கள், 18 சதவீத வரம்புக்குள் வருமா?

ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் இன்று நடக்கிறது. அதில், ஏ.சி., சிமெண்டு, டயர், சில எலெக்ட்ரானிக் சாதனங்கள் ஆகியவற்றின் மீதான வரியை குறைப்பது பற்றி பரிசீலிக்கப்படுகிறது.
ஜி.எஸ்.டி. கவுன்சில் இன்று கூடுகிறது: ஏ.சி., சிமெண்டு, டயர் மீதான வரி குறைக்கப்பட வாய்ப்பு - 99 சதவீத பொருட்கள், 18 சதவீத வரம்புக்குள் வருமா?
Published on

புதுடெல்லி,

நாட்டின் மறைமுக வரிகளுக்கு மாற்றாக, சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) என்ற ஒற்றை வரி, கடந்த ஆண்டு ஜூலை 1-ந் தேதி அமலுக்கு கொண்டுவரப்பட்டது. 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம், 28 சதவீதம் என 4 அடுக்குகளாக ஜி.எஸ்.டி. வரி சதவீதம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

வரி விகிதங்களை மாற்றி அமைப்பது குறித்து முடிவெடுக்க மாநில நிதி மந்திரிகள் அடங்கிய ஜி.எஸ்.டி. கவுன்சில் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கவுன்சில் அவ்வப்போது கூடி முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் இன்று நடக்கிறது.

இந்த கூட்டத்தில், கவுன்சில் உறுப்பினர்களாக உள்ள மாநில நிதி மந்திரிகள் கலந்துகொள்கிறார்கள். இதில், ஜி.எஸ்.டி. கணக்கு தாக்கலை எளிமைப்படுத்துவது பற்றியும், சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான தொகையை திரும்ப அளிப்பது பற்றியும் விவாதிக்கப்படுகிறது.

மேலும், சமீபத்தில் மும்பையில் ஒரு கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, சாதாரண மக்கள் பயன்படுத்தும் 99 சதவீத பொருட்கள், 18 அல்லது அதற்கு குறைவான சதவீத வரி வரம்புக்குள் கொண்டு வரப்படும் என்று அறிவித்தார்.

இன்றைய கூட்டத்தில் இதுபற்றியும் ஆலோசிக்கப்படுகிறது. அனைத்து உறுப்பினர்களிடையே கருத்து ஒற்றுமை உருவாக்க முயற்சி மேற்கொள்ளப்படும் என்று தெரிகிறது. அப்படி கருத்து ஒற்றுமை உருவானால், ஆடம்பர பொருட் கள், புகையிலை பொருட்கள் போன்றவற்றுக்கு மட்டும் 28 சதவீத வரி நீடிக்கும். மற்ற 99 சதவீத பொருட்கள், 18 சதவீதத்துக்கு கீழ் கொண்டுவரப்படும்.

ஏ.சி., ஆட்டோமொபைல் டயர், சிமெண்டு, ரியல் எஸ்டேட் சாதனங்கள், சில எலெக்ட்ரானிக் கருவிகள் ஆகியவை மீதான வரி குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கட்டுமான தொழிலை ஊக்குவிக்க சிமெண்டு மீதான ஜி.எஸ்.டி. 18 சதவீதமாக குறைக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு விரும்புகிறது. 5 மாநில சட்டசபை தேர்தல்களில் தோல்வி ஏற்பட்டதாலும், நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதாலும் வரி குறைப்பு சலுகைகளை அறிவிக்க மத்திய அரசு விரும்புகிறது.

இருப்பினும், ஐந்து நட்சத்திர ஓட்டல் அறைகளுக்கான ஜி.எஸ்.டி. குறைக்கப்பட மாட்டாது என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com