“ஜி.எஸ்.டி. கணக்கு தாக்கலை மேலும் எளிமைப்படுத்துவோம்” - நிர்மலா சீதாராமன் தகவல்

ஜி.எஸ்.டி. கணக்கு தாக்கல் செய்வதை மேலும் எளிமைப்படுத்துவோம் என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார்.
“ஜி.எஸ்.டி. கணக்கு தாக்கலை மேலும் எளிமைப்படுத்துவோம்” - நிர்மலா சீதாராமன் தகவல்
Published on

புதுடெல்லி,

17 விதமான வரிகளை ஒருங்கிணைத்து, சரக்கு-சேவை வரி (ஜி.எஸ்.டி.), கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 1-ந் தேதி அமல்படுத்தப்பட்டது. அந்த வரி அமலுக்கு வந்து, நேற்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடைந்தன.

இதையொட்டி, மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ஜி.எஸ்.டி. கணக்கு தாக்கல் செய்யும் பணியை பெரிய அளவில் எளிமைப்படுத்த நாங்கள் உறுதி பூண்டுள்ளோம் என்று அவர் கூறியுள்ளார்.

மேலும், ஜி.எஸ்.டி. அமலுக்கு வந்தபோது, மத்திய நிதி மந்திரியாக இருந்த அருண் ஜெட்லி, தனது பேஸ்புக் பக்கத்தில் இதுகுறித்து ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

ஜி.எஸ்.டி.யை அமல்படுத்துவது அரசியல்ரீதியாக பாதுகாப்பானது அல்ல, ஜி.எஸ்.டி.யால் பல்வேறு நாடுகளில் அரசுகள் தோற்றுப்போய்விட்டன என்றெல்லாம் எங்களை பலர் எச்சரித்தனர். ஆனால், அமல்படுத்தப்பட்ட சில வாரங்களிலேயே ஜி.எஸ்.டி., சுமுகமாக ஏற்கப்பட்டு விட்டது. ஏற்கனவே 20 மாநிலங்கள், தங்களின் வருவாயில் 14 சதவீதம் உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளன.

தற்போது, ஜி.எஸ்.டி.யானது, 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம், 28 சதவீதம் என 4 அடுக்குகள் கொண்டதாக உள்ளது. 28 சதவீதம் என்பது, ஆடம்பர பொருட்கள், புகையிலை பொருட்கள் போன்றவற்றுக்கு மட்டுமே விதிக்கப்படுவதால், அது ஏறக்குறைய ஒழிந்து விட்டதாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்.

சாதாரண மக்கள் பயன்படுத்தும் பெரும்பாலான பொருட்கள், 5 சதவீத வரிவிதிப்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதனால், கடந்த 2 ஆண்டுகளில் ரூ.90 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இருப்பினும், அதிகம்பேர் வரி செலுத்துவதால், வரி வருவாய் உயர்ந்துள்ளது.

இதன் காரணமாக, கொள்கை முடிவு எடுப்பவர்கள், 12 சதவீதம் மற்றும் 18 சதவீதம் என 2 அடுக்குகளையும் ஒருங்கிணைத்து ஒன்றாக்கிவிட வாய்ப்புள்ளது. அதன்பிறகு, அந்த ஒன்றுபட்ட வரி விகிதம், ஏற்கனவே உள்ள 5 சதவீதம் என 2 அடுக்குகள் மட்டுமே கொண்டதாக ஜி.எஸ்.டி. மாற்றப்படக்கூடும்.

ஜி.எஸ்.டி. அமலுக்கு முன்பு, பணக்காரர்களும், ஏழைகளும் அனைத்து பொருட்களுக்கும் ஒரே வரியை செலுத்தினர். ஆனால், ஜி.எஸ்.டி. வரியானது, சாதாரண மக்கள் பயன்படுத்தும் பொருட்களுக்கு அதிகமான வரி போடுவதை தடுத்துள்ளது.

ஏழைகளே இல்லாத வளர்ந்த நாடுகளில்தான், ஒற்றை அடுக்கு கொண்ட ஜி.எஸ்.டி. சாத்தியம் ஆகும். வறுமைக் கோட்டுக்கு கீழ் ஏராளமான மக்கள் வாழும் நாடுகளில், ஒற்றை அடுக்கு வரி சாத்தியமல்ல. உதாரணத்துக்கு, செருப்புக்கும், காருக்கும் ஒரே விதமான வரியை விதிக்க முடியாது. இவ்வாறு அருண் ஜெட்லி கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com