குஜராத் சட்டசபையில் 16 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இடைநீக்கம்

ராகுல் காந்தி எம்.பி. பதவி நீக்கம் தொடர்பாக குஜராத் சட்டசபையில் அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 16 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
குஜராத் சட்டசபையில் 16 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இடைநீக்கம்
Published on

அனுமதி மறுப்பு

குஜராத் சட்டசபையில் தற்போது பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இந்நிலையில், ராகுல் காந்தியின் எம்.பி. பதவி நீக்கத்தை எதிர்த்து, பிரதான எதிர்க்கட்சியான காங்கிரசின் எம்.எல்.ஏ.க்கள் நேற்று சட்டசபைக்கு கருப்பு உடை அணிந்து வந்தனர். ஆனந்த் படேல் தவிர மற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 16 பேரும் அவைக்கு வந்திருந்தனர்.

கேள்விநேரம் தொடங்கியதும் காங்கிரஸ் சட்டப்பேரவை கட்சி தலைவர் அமித் சாவ்தா எழுந்து நின்று, ராகுல் காந்தியின் தகுதிநீக்கம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆனால் கேள்விநேரத்தின்போது விவாதத்துக்கு அனுமதியில்லை என்று சபாநாயகர் சங்கர் சவுத்திரி மறுத்தார்.

குண்டுக்கட்டாக அகற்றம்

அப்போது மற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் சபையின் மையப்பகுதிக்கு வந்து, பிரதமர் மோடிக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். மோடியும், அதானியும் ஒன்றாக இருக்கும் புகைப்பட அட்டைகளையும் அவர்கள் ஏந்தியிருந்தனர்.

சபாநாயகரின் எச்சரிக்கையையும் மீறி தொடர்ந்து முழக்கமிட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை ஒருநாள் இடைநீக்கம் செய்வதாக அறிவித்த சபாநாயகர், அவர்களை வௌயேற்ற சபை காவலர்களுக்கு உத்தரவிட்டார். ஆனால் அவர்கள் வெளியேற மறுத்து, சட்டசபையின் மையப்பகுதியில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது அவர்களில் சிலரை சபை காவலர்கள் குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றினர்.

இடைநீக்கம்

கேள்விநேரத்தின் முடிவில், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்வதற்கான தீர்மானம் கொண்டுவரப்பட்டு, குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

அதையடுத்து, நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரின் மீதமுள்ள நாட்கள் முழுவதும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 16 பேரும் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

பீகார் சட்டசபையிலும் அமளி

ராகுல் காந்தி தகுதி நீக்கத்தின் எதிரொலியாக, பீகார் சட்டசபையிலும் நேற்று கடும் அமளி ஏற்பட்டது. காங்கிரஸ் உள்ளிட்ட ஆளும் மகா கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கையிலும், தலையிலும் கருப்பு பட்டைகளை அணிந்திருந்த அவர்கள், ராகுல் காந்தியின் புகைப்படத்துடன் கூடிய சுவரொட்டிகளை ஏந்தியிருந்தனர். நாட்டின் ஜனநாயகமும், அரசியலமைப்பும் அபாயத்தில் இருப்பதாக முழக்கங்களை எழுப்பினர்.

ஐக்கிய ஜனதா தளமும்...

கடந்த வாரம், ராகுல் பதவி பறிப்புக்கு எதிரான போராட்டங்களில் இருந்து விலகியிருந்த, முதல்-மந்திரி நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளமும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றது.

மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ.க்களும் இதில் இணைந்துகொண்டனர்.

பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு

இந்நிலையில் எதிர்க்கட்சியான பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையின் மையப்பகுதிக்கு வந்து, மாநிலத்தில் விதிக்கப்பட்டிருக்கும் அதிகமான மின்கட்டணத்துக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

பின்னர் அவர்கள் வெளிநடப்பு செய்ய, சபையின் மற்ற உறுப்பினர்களுடன் கேள்விநேரம் தொடர்ந்து நடைபெற்றது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com