குஜராத் முதல் கட்ட தேர்தல்: 137 வேட்பாளர்கள் குற்றப்பின்னணி உடையவர்கள்!

குஜராத் முதல் கட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 137 பேர் குற்றப்பின்னணி உடையவர்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
குஜராத் முதல் கட்ட தேர்தல்: 137 வேட்பாளர்கள் குற்றப்பின்னணி உடையவர்கள்!
Published on

அகமதாபாத்,

குஜராத் மாநில சட்டசபைக்கு வருகிற 9 மற்றும் 14ந் தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடக்கிறது. மொத்தம் உள்ள 182 சட்டசபை தொகுதிகளுக்கு முதல்கட்டமாக 89 தொகுதிகளுக்கு வரும் 9-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 900-க்கும் மேற்பட்டோர் பல்வேறு கட்சிகள் சார்பில் போட்டியிட உள்ளனர். இவர்களில் 137 பேர் மீது கொலை, கடத்தல், பாலியல் பலாத்காரம் போன்ற பயங்கர வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது.

ஜனநாயக சீர்திருத்த சங்கம், குஜராத் தேர்தல் கண்காணிப்பு அமைப்பு ஆகிய தொண்டு நிறுவனங்கள், வேட்பாளர்கள் வேட்பு மனுக்களுடன் இணைத்துள்ள பிரமாணப் பத்திரங்களை ஆய்வு செய்து, அதுதொடர்பான அறிக்கையை வெளியிட்டுள்ளன. அதில் கூறப்பட்டுள்ளதாவது:-முதல்கட்டத் தேர்தலில் களத்தில் உள்ள 977 வேட்பாளர்களில் 923 பேரின் பிரமாணப் பத்திரங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

அதில், 137 பேர் குற்ற வழக்குகளை எதிர்கொண்டு வருவது தெரியவந்தது. அவர்களில் 78 பேருக்கு எதிராக கொலை, கொலை முயற்சி, கடத்தல், பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட தீவிரமான குற்ற வழக்குகள் உள்ளன. 89 பாஜக வேட்பாளர்களில், 10 பேருக்கு எதிராகவும், காங்கிரஸ் வேட்பாளர்களில் 20 பேருக்கு எதிராகவும் தீவிரமான குற்ற வழக்குகள் உள்ளன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com