

அகமதாபாத்,
182 உறுப்பினர்களை கொண்ட குஜராத் சட்டசபைக்கு டிசம்பர் 9, 14ந் தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி 89 தொகுதிகளுக்கு முதல் கட்ட தேர்தல் கடந்த 9ந்தேதி நடந்தது. அதில் சுமார் 68 சதவீதம் வாக்குகள் பதிவானது. இந்த நிலையில் எஞ்சிய 93 தொகுதிகளுக்கு 2வது மற்றும் இறுதிக்கட்டமாக தேர்தல் இன்று தேர்தல் துவங்கி நடைபெற்று வருகிறது. காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியதும் மக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.
பிரதமர் மோடியின் சொந்த மாநிலம், குஜராத் என்பதால் பிரதமர் மோடி இன்று வாக்களிக்க குஜராத் வருகை தந்தார். அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ரனிப் என்ற இடத்தில் உள்ள 115 - வது எண் வாக்குச்சாவடியில் பிரதமர் மோடி வரிசையில் நின்று தனது வாக்கினை பதிவு செய்தார். வாக்களிக்க வருகை தந்திருந்த மோடி, சக வாக்காளர்களிடம் மிகவும் சகஜமாக பேசிக்கொண்டு இருந்தார். பிரதமர் மோடியை பார்த்ததும் அங்குள்ள வாக்காளர்கள் உற்சாகமாக அவரைப்பார்த்து மோடி மோடி என்று கோஷம் எழுப்பினர்.
இதற்கிடையில், பிரதமர் மோடி தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. வாக்களித்த பிறகு வீதிப் பிரசாரத்தில் மோடி ஈடுபட்டதாக, தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் ,மோடிக்கு எதிராக புகார் தெரிவித்துள்ளது.