குஜராத் சட்டசபை தேர்தல்: பிரதமர் மோடி பற்றி உணர்ச்சி வசப்பட்டு பேசிய அவரது சகோதரர்

குஜராத் சட்டசபை தேர்தலில் வாக்களித்த பின் பிரதமர் மோடி பற்றி பேசிய அவரது சகோதரர் உணர்ச்சி பெருக்குடன் விசயங்களை பகிர்ந்து கொண்டார்.
குஜராத் சட்டசபை தேர்தல்: பிரதமர் மோடி பற்றி உணர்ச்சி வசப்பட்டு பேசிய அவரது சகோதரர்
Published on

ஆமதாபாத்,

குஜராத் மாநிலத்தில் 182 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக நடத்த முடிவானது. இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இதன்படி, 89 தொகுதிகளுக்கு கடந்த 1-ந்தேதி முதல்கட்ட தேர்தல் நடந்து முடிந்தது.

இதனை தொடர்ந்து, மீதமுள்ள 93 தொகுதிகளுக்கான இரண்டாவது கட்ட தேர்தல் இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடந்து வருகிறது. வாக்குப்பதிவு மாலை 5.30 மணி வரை நடைபெறுகிறது.

இந்த தேர்தலில், பல முக்கிய பிரமுகர்கள் வாக்களித்தனர். பிரதமர் மோடி, ஆமதாபாத் நகரில் உள்ள நிஷான் பப்ளிக் பள்ளி கூடத்தில் தனது வாக்கை இன்று செலுத்தினார். இமாசல பிரதேசம், டெல்லி மற்றும் குஜராத் மக்கள் ஜனநாயக திருவிழாவை சிறப்புடன் கொண்டாடி வருவதற்காக நன்றி என அவர் தெரிவித்து கொண்டார்.

இதேபோன்று, ஆமதாபாத் நகரில் ராணிப் என்ற இடத்தில் அமைந்த, பிரதமர் மோடி வாக்களித்த அதே நிஷான் பப்ளிக் பள்ளி கூடத்தில், அவரது சகோதரர் சோமபாய் மோடி தனது வாக்கை இன்று செலுத்தினார்.

இதன்பின் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது பிரதமர் மோடியுடன் பேசிய நிகழ்வை பகிர்ந்து கொண்டார். இதுபற்றி சோமபாய் கூறும்போது, அவரிடம் (பிரதமர் மோடி) நான் கேட்டேன். நாட்டுக்காக நிறைய பணி செய்து விட்டாய். நீ நன்றாக ஓய்வெடுக்க வேண்டும் என கேட்டு கொண்டேன் என உணர்ச்சி பெருக்குடன் பேசினார்.

இதனை தொடர்ந்து அவர் பேசும்போது, வாக்காளர்களுக்கு நான் அளிக்கும் ஒரே செய்தி, அவர்கள் தங்களது வாக்குகளை நன்றாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். நாட்டின் வளர்ச்சி பணிகளுக்கு சேவையாற்றும் கட்சிக்கு அவர்கள் வாக்களிக்க வேண்டும்.

2014-ம் ஆண்டில் இருந்து தேசிய அளவில் நடந்த பணிகளை மக்கள் பார்த்துள்ளனர். அவற்றை மக்கள் புறக்கணித்து விட முடியாது. அதன் அடிப்படையில் பொதுமக்கள் வாக்களிப்பார்கள் என்று பேசியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com