

ஆமதாபாத்,
குஜராத் சட்டமன்ற எம்.எல்.ஏ.க்களின் மாதாந்திர வருமானத்தில் ரூ..45,589 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான சட்டமசோதா குஜராத் சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் ரூபானி தலைமையில் இன்று நிறைவேற்றப்பட்டது. இதன்படி ரூ.70,727 ஆக இருந்த எம்.எல்.ஏ.க்களின் சம்பளம் தற்போது ரூ1,16,316 ஆக உயர்ந்துள்ளது. அதாவது ரூ.45,589 உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சட்ட வல்லுனர்களால் இயற்றப்பட்ட சட்டமசோதா நிலுவையில் இருந்த நிலையில், இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும் எம்.எல்.ஏ.க்களின் தினசரி படி ரூ.200 லிருந்து ரூ.1000-ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற குஜராத் சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 182 தொகுதிகளில் பாஜக கட்சி 99 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.