குஜராத் பால விபத்து; பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு

குஜராத் பால விபத்தில் காயமடைந்த 5 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குஜராத் பால விபத்து; பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு
Published on

வதோதரா,

குஜராத் மாநிலத்தின் ஆனந்த் மாவட்டத்தில் 45 ஆண்டுகள் பழமையான பாலம் ஒன்று உள்ளது. வதோதரா நகரில் இருந்து 25 கி.மீ. தொலைவில் அமைந்த இந்த பாலம், மாவட்டத்தின் முஜ்பூர் மற்றும் கம்பீரா பகுதிகளை இணைக்கிறது. சவுராஷ்டிரா பகுதியையும் கூட இந்த பாலம் இணைக்கிறது.

இந்நிலையில், நேற்று காலை 7.30 மணியளவில் இந்த பாலம் திடீரென இடிந்து விழுந்தது. இதனால், பாலத்தில் சென்று கொண்டிருந்த பைக், கார் உள்ளிட்ட வாகனங்களும், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களும் மகிசாகர் ஆற்றில் கவிழ்ந்தன.

பாலத்தில் பல அடி உயரத்தில் இருந்து வாகனங்கள் கீழே விழுந்த இந்த சம்பவத்தில் பலர் காயமடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்து போலீசார், பேரிடர் மீட்பு படையினர் உடனடியாக சம்பவ பகுதிக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். அவர்களுடன் உள்ளூர்வாசிகளும் இணைந்து கொண்டனர். மிக பழமையான இந்த பாலம் முறையாக பராமரிக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு கூறப்படுகிறது.

இந்த விபத்தில் பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்து உள்ளது. காயமடைந்த 5 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். எனினும், அவர்களில் யாருக்கும் தீவிர சிகிச்சை தேவைப்படவில்லை என தகவல் தெரிவிக்கின்றது. தொடர்ந்து, தேசிய பேரிடர் பொறுப்பு படையினர் மற்றும் பிற அமைப்பினர் ஆற்றில் தேடுதல் மற்றும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com