குஜராத் பால விபத்து: பலி எண்ணிக்கை 22 ஆக உயர்வு


குஜராத் பால விபத்து:  பலி எண்ணிக்கை 22 ஆக உயர்வு
x

குஜராத்தில் பால விபத்தில் சிக்கி காயமடைந்த நபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் இன்று உயிரிழந்து விட்டார்.

வதோதரா,

குஜராத் மாநிலத்தின் ஆனந்த் மாவட்டத்தில் 45 ஆண்டுகள் பழமையான பாலம் ஒன்று இருந்தது. வதோதரா நகரில் இருந்து 25 கி.மீ. தொலைவில் அமைந்த இந்த பாலம், மாவட்டத்தின் முஜ்பூர் மற்றும் கம்பீரா பகுதிகளை இணைக்கிறது. சவுராஷ்டிரா பகுதியையும் கூட இந்த பாலம் இணைக்கிறது.

இந்நிலையில், கடந்த ஜூலை 9-ந்தேதி காலை 7.30 மணியளவில் இந்த பாலம் திடீரென இடிந்து விழுந்தது. இதனால், பாலத்தில் சென்று கொண்டிருந்த பைக், கார் உள்ளிட்ட வாகனங்களும், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களும் மகிசாகர் ஆற்றில் கவிழ்ந்தன.

பாலத்தில் பல அடி உயரத்தில் இருந்து வாகனங்கள் கீழே விழுந்த இந்த சம்பவத்தில் பலர் காயமடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்து போலீசார், பேரிடர் மீட்பு படையினர் உடனடியாக சம்பவ பகுதிக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். அவர்களுடன் உள்ளூர்வாசிகளும் இணைந்து கொண்டனர். மிக பழமையான இந்த பாலம் முறையாக பராமரிக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில், குஜராத்தில் பால விபத்தில் சிக்கி காயமடைந்த நபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் இன்று உயிரிழந்து விட்டார். அவர் ஆனந்த் மாவட்டத்தின் பொர்சாத் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த திலீப் பதியார் (வயது 34) என அடையாளம் காணப்பட்டு உள்ளார்.

அவர், வதோதராவில் உள்ள ஆலையில் பணி முடிந்து இரவில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தபோது, பாலம் இடிந்து விழுந்துள்ளது. திலீப் உயிரிழந்த நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 22 ஆக உயர்ந்து உள்ளது. இதேபோன்று, விக்ரம் பதியார் என்ற ஒரு நபர் மட்டும் காணாமல் போயுள்ளார். அவரை தேடும் பணி நடந்து வருகிறது.

1 More update

Next Story