வளர்ப்பு நாயின் நகக் கீறல்; ரேபிஸ் தாக்கி காவல் ஆய்வாளர் உயிரிழப்பு

நாய்க்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தியிருந்ததுடன், வெறும் நகக்கீறல்தானே என்று அவர் அலட்சியமாக இருந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வளர்ப்பு நாயின் நகக் கீறல்; ரேபிஸ் தாக்கி காவல் ஆய்வாளர் உயிரிழப்பு
Published on

அகமதாபாத் ,

குஜராத் மாநிலம் அகமதாபாத் காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இதில் காவல் ஆய்வாளராக வன்ராஜ் சிங் மஞ்சரியா கடந்த 25 வருடங்களாக காவல் துறையில் பணியாற்றி வந்துள்ளார். அவருக்கு மனைவி, ஆடிட்டர் படிக்கும் ஒரு மகள், மற்றும் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் மகன் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 19-ம் தேதி காவல் ஆய்வாளர் வன்ராஜ் சிங் மஞ்சரியாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு உள்ளது. உடனடியாக அவரது குடும்ப உறுப்பினர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

இதனையடுத்து டாக்டர்கள் காவல் ஆய்வாளர் வன்ராஜ் சிங் மஞ்சரியாவை பரிசோதனை செய்துள்ளனர். அப்போது உடலில் நாயின் நகக் கீறல் இருந்தது. மேலும் மஞ்சரியாவுக்கு ஹைட்ரோபோபியா (தண்ணீர் பயம்), ஏரோபோபியா (புதிய காற்று அல்லது வரைவுகள் பயம்), மற்றும் நரம்பியல் சம்பந்தப்பட்ட ரேபிஸ் நோயுடன் தொடர்புடைய மருத்துவ அறிகுறிகள் இருந்தன. இதனால் சந்தேகம் அடைந்த டாக்டர்கள் இது ரேபிஸ் நோய்தானா என்பதை உறுதிப்படுத்த புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு (NIV) மாதிரிகள் அனுப்பி வைத்தனர்.

ஆய்வில் காவல் ஆய்வாளர் வன்ராஜ் சிங் மஞ்சரியாவுக்கு ரேபிஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த சம்பவம் குறித்து காவலர் குடும்ப உறுப்பினர்களிடம் கேட்ட போது, அவரிடம் பல செல்ல நாய்கள் இருந்ததாகவும், அவற்றில் ஒன்று காணாமல் போய் பின்னர் திரும்பி வந்ததாகவும் தெரிவித்தனர். கடந்த 5 நாட்களுக்கு முன் தங்களுடைய வளர்ப்பு நாயிடம் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது நாயின் நகம் உடலில் கீறியது. நாய்களுக்கு ரேபிஸ் தொற்றுக்கான அறிகுறிகள் எதுவும் இல்லை. மேலும் நாய்க்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தி இருந்ததுடன் வேறு தானே என்று அலட்சியமாக இருந்ததாக கூறியுள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த டாக்டர்கள் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர். இந்தநிலையில் ரேபிஸ் நோயால் காவல் ஆய்வாளர் வன்ராஜ் சிங் மஞ்சரியா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

நாய் கடித்தாலோ அல்லது நகங்கள் கீறினாலோ ரேபிஸ் அறிகுறிகள் பொதுவாக வெளிப்பட்ட சில நாட்கள் ஆகும். ஆனால் சில நேரங்களில் ஒரு மாதத்திற்கு மேல் ஆகலாம். விலங்கு கடித்தால் மட்டுமே நோய் வரும் என்பது அவசியமில்லை. ரேபிஸ் பாதிக்கப்பட்ட விலங்குகளின் உமிழ்நீர் திறந்த காயத்தில் பட்டாலும் வைரஸ் இரத்த ஓட்டத்தில் நுழையக்கூடும். விலங்குகளுடன் நேரடி தொடர்பைத் தவிர்க்க வேண்டும், மேலும் அவற்றை கையால் உணவளிக்கக் கூடாது.

செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசி போட வேண்டும். கடித்தால், காயத்தை சோப்பு மற்றும் மருந்துகளால் சுத்தம் செய்து, உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும். தெரு நாய்களை கவனிப்பவர்கள் அல்லது விலங்குகளுடன் தொடர்பு கொள்ள வேண்டிய வேலை செய்பவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம், மற்றவர்கள் அனைவரும் தடுப்பூசி போட வேண்டியதில்லை. மனிதனிடமிருந்து மனிதனுக்கு பரவுவது மிகவும் அரிது என்று டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com