குஜராத்: ரூ.1,800 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல்

குஜராத்தில் 300 கிலோ எடை கொண்ட போதை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஆமதாபாத்,
குஜராத்தில் பயங்கரவாத ஒழிப்பு படை மற்றும் இந்திய கடலோர காவல் படை இணைந்து கடந்த 12 மற்றும் 13 ஆகிய இரு நாட்களில் சர்வதேச கடல் எல்லை கோட்டு பகுதியில் சோதனையில் ஈடுபட்டது.
இதில், 300 கிலோ எடை கொண்ட போதை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.1,800 கோடியாகும். இதுபற்றி இந்திய கடலோர காவல் படை வெளியிட்ட செய்தியில், குஜராத் கடலோர பகுதியருகே மேற்கொண்ட சோதனையின்போது, எங்களுடைய கப்பலை கடத்தல்காரர்கள் அடையாளம் கண்டு கொண்டனர்.
அவர்கள் உடனே, போதை பொருட்களை கடலுக்குள் வீசி விட்டு தப்பி செல்ல முயன்றனர். அந்த போதை பொருட்கள் கடலில் இருந்து கைப்பற்றப்பட்டது. இதன்பின்னர் பயங்கரவாத ஒழிப்பு படையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. கடத்தலுக்கு எதிரான கூட்டு படையின் வலுவான சக்திக்கான பரிசோதனை இதுவாகும் என அதுபற்றி அவர்கள் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை தெரிவிக்கின்றது.






