

காந்திநகர்,
சிறைச்சாலை சீர்திருத்தங்கள் மற்றும் கைதிகள் நலனை மேம்படுத்தும் நோக்கில் குஜராத் அரசு தகுதியுள்ள 143 கைதிகளுக்கு 15 நாட்கள் பரோல் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.
தீபாவளிப் பண்டிகையைக் குடும்பத்தினருடன் விமரிசையாகக் கொண்டாடும் வகையில், மாநிலத்தின் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 60 வயதைக் கடந்த 103 முதியவர்கள் மற்றும் 40 பெண் கைதிகள் என மொத்தம் 143 தகுதியுள்ள கைதிகளுக்கு 15 நாட்கள் பரோல் வழங்கி குஜராத் அரசு உத்தரவிட்டுள்ளது.
மாநில துணை முதல்-மந்திரி ஹர்ஷ் சங்கவியின் வழிகாட்டுதலின் கீழ் இந்த பரோலுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. சிறை சீர்திருத்தம் மற்றும் கைதிகள் நலத்திட்டத்தின் ஒரு பகுதியாக குஜராத் அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.
2003 ஆம் ஆண்டு முதல், மாநில அரசு ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தகுதியுள்ள கைதிகளுக்கு 15 நாட்கள் பரோல் வழங்கி வருகிறது. அதன்படி, பெண் கைதிகள், 60 வயதிற்கு மேற்பட்ட அல்லது தகுதியுள்ள கைதிகளுக்கு இந்த சலுகை நீட்டிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம், கைதிகள் தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் தீபாவளியைக் கொண்டாட இயலும் எனக் கூறப்படுகிறது.
மாநில அரசு விதிகளின்படி, கடுமையான குற்றங்களில் அதாவது, பாலியல் வன்கொடுமை, கடத்தல், கொள்ளை, வழிப்பறி, திருட்டு அல்லது மிரட்டிப் பணம் பறித்தல் போன்ற கடுமையான மற்றும் சமூக விரோதக் குற்றங்களில் ஈடுபட்ட கைதிகள், இந்த தீபாவளி பரோலுக்குத் தகுதி பெற மாட்டார்கள் எனக் குஜராத் சிறைகள் மற்றும் சீர்திருத்தத் துறைகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.