குஜராத் விமான விபத்து: கனவை நோக்கி பயணித்த மாணவி பலி

குஜராத் விமான விபத்து குறித்து உயர்மட்டக்குழு விசாரணை நடத்துகிறது.
ஆமதாபாத்,
குஜராத்தின் ஆமதாபாத்தில் நடந்த விமான விபத்து உலக விமானப் போக்குவரத்து துறையை உலுக்கி இருக்கிறது. அங்குள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 230 பயணிகள், 2 விமானிகள் மற்றும் 10 பணியாளர்கள் என 242 பேருடன் கடந்த 12-ந்தேதி லண்டன் கிளம்பிய விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விழுந்து நொறுங்கியது.
டாடா குழுமத்துக்கு சொந்தமான ஏர் இந்தியாவின் போயிங் 787 வரிசை விமானங்களில் ஒன்றான இந்த விமானம், சில நிமிடங்களில் விமானியின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள பி.ஜே. மருத்துவக்கல்லூரி விடுதி கட்டிடத்தில் விழுந்து வெடித்து சிதறியது. விமானத்தில் இருந்தவர்களும், தரையில் இருந்தவர்களும் என்ன நடக்கிறது? என அறிந்து கொள்வதற்கு முன்னரே அனைத்தும் முடிந்து விட்டது.
இந்த கோர விபத்தில் விமானத்தில் இருந்த 241 பேர் உடல் கருகி பலியாகினர். இறந்தவர்களில் பலரது உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு கருகி சோகத்தை கூட்டி விட்டன. மேலும் மருத்துவக்கல்லூரி விடுதிக்கட்டிடத்தில் இருந்த மருத்துவ மாணவர்கள் மற்றும் அந்த மருத்துவக்கல்லூரி வளாகத்தில் இருந்தவர்கள் என பலரும் இந்த துயர சம்பவத்தில் சிக்கியதால் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. மேலும் விபத்து குறித்து உயர்மட்டக்குழு விசாரணை நடத்துகிறது.
இந்த நிலையில், ஆமதாபாத் விமான விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் மகளின் கனவை நோக்கி பயணம் துயரத்தில் முடிந்துள்ளது. குஜராத்தின் ஹிமாத்நகரைச் சேர்ந்த இளம்பெண் பாயல் காதிக். இவர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் முதுகலைப் பட்டம் படிக்க லண்டன் சென்றபோது விபத்தில் உயிரிழந்தார். அவரது தந்தை சரக்கு ஏற்றும் ஆட்டோ ஓட்டுகிறார். மேலும் உயிரிழந்த மாணவி தான் அவரது குடும்பத்தில் முதல் பட்டதாரி என உறவினர்கள் கூறினர்.
இது குறித்து பாயல் காதிக்கின் தந்தை கூறுகையில்,
சம்பவத்தன்று காலை 10 மணிக்கு, பாயலுக்கு பிரியாவிடை அளித்துவிட்டு இன்ப கனவுகளுடன் வீடு திரும்பினோம். ஆனால், சில நிமிடங்களுக்குள் விமானம் விபத்துக்குள்ளானது என்ற செய்தி வந்தது. விபத்தில் ஒரு பயணியை தவிர அனைவரும் உயிரிழந்ததாக தகவல் தெரியவந்தது. எனது மகளுடைய மரணம் டிஎன்ஏ பகுப்பாய்வு மூலம் உறுதிப்படுத்தப்பட்டது. பாயல் லண்டனில் படிக்க விரும்பினாள். அதனால் அவளுடைய கல்விக்கு உதவ நாங்கள் கடன் வாங்கி அவளை அங்கு அனுப்பினோம் என்று தந்தை சுரேஷ் காதிக் வருத்தமுடன் கூறினார்.






