குஜராத்: 1,000 ஆண்டு வரலாறு கொண்ட சோம்நாத் கோவிலில் சவுரியா யாத்திரையில் பங்கேற்ற பிரதமர் மோடி


தினத்தந்தி 11 Jan 2026 10:47 AM IST (Updated: 11 Jan 2026 11:30 AM IST)
t-max-icont-min-icon

குஜராத்தில் சோம்நாத் கோவிலில் முதல் தாக்குதல் நடந்து 1,000 ஆண்டுகள் முடிந்த நிலையில், சவுரியா யாத்திரை நடத்தப்படுகிறது.

வெராவல்,

குஜராத்தில் பிரதமர் மோடி 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக சோம்நாத்துக்கு அவர் நேற்று சென்றார். துடிப்பான குஜராத் மண்டல் மாநாடு உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். சோம்நாத் கோவிலின் பெருமையை பிரதிபலிக்கும் வகையில் நடந்த வண்ணமய டிரோன் காட்சிகளையும் கண்டு களித்தார்.

இந்த நிலையில், கிர் சோம்நாத் மாவட்டத்தில் வெராவல் நகர் அருகே அமைந்த பிரபல சோம்நாத் மகாதேவ கோவிலுக்கு இன்று காலை அவர் சென்றார். இதற்காக ஹெலிபேட்டில் வந்திறங்கிய பிரதமர் மோடியை குஜராத் முதல்-மந்திரி பூபேந்திர பட்டேல் நேரில் சென்று சிறப்பான முறையில் வரவேற்றார்.

சோம்நாத் கோவிலில் பிரதமர் மோடி, காலை 9.45 மணியளவில் பூஜைகள் செய்து, சாமி தரிசனம் மேற்கொண்டார். இதன்பின்னர் சோம்நாத் கோவிலில் இருந்து புறப்பட்ட சவுரியா யாத்திரையில் பிரதமர் மோடி பங்கேற்றார்.

1,000 ஆண்டுகளுக்கு முன் முதன்முறையாக சோம்நாத் கோவில் தாக்கப்பட்டபோது, எதிர்த்து போராடி உயிரிழந்த வீரர்களை நினைவுகூரும் வகையில் 108 குதிரைகள் முன்னே செல்ல இந்த யாத்திரை தொடங்கி நடந்து வருகிறது.

1,026-ம் ஆண்டு இந்த கோவில் மீது முதல் தாக்குதல் நடந்தது. இந்நிலையில், முதல் தாக்குதல் நடந்து 1,000 ஆண்டுகள் முடிந்த வரலாறை குறிக்கும் வகையில் நடந்து வரும் சவுரியா யாத்திரையில் திரளான மக்கள் கலந்து கொண்டுள்ளனர்.

1 More update

Next Story