நீட் தேர்வு முறைகேடு: குஜராத்தில் 5 பேர் கைது

நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக குஜராத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீட் தேர்வு முறைகேடு: குஜராத்தில் 5 பேர் கைது
Published on

கோத்ரா,

மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த 5-ந்தேதி நடைபெற்றது. சுமார் 24 லட்சம் மாணவர்கள் தேர்வை எழுதினார்கள். நீட் தேர்வு நடைபெற்ற தினத்தில் ராஜஸ்தான் மாநிலத்தில் வினாத்தாள் கசிந்ததாகவும், ஆள்மாறாட்டம் நடந்ததாகவும் புகார் எழுந்தது. இதை தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) மறுத்தது.

ஆனாலும் நீட் தேர்வு முடிவு வெளியானபோது அரியானா மாநிலத்தில் ஒரே மையத்தில் படித்த 6 பேர் 720 மதிப்பெண்கள் பெற்றதும், 1.563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதும் பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து 1,563 மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்களை ரத்து செய்வதாகவும், அவர்களுக்கு 23-ந்தேதி மறு தேர்வு நடத்துவதாகவும் மத்திய அரசு மற்றும் தேசிய தேர்வு முகமை சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. இதை கோர்ட்டும் ஏற்றுக்கொண்டது.

இந்தநிலையில் நீட் தேர்வில் குஜராத் மாநிலத்தில் மிகப்பெரிய முறைகேடு நடைபெற்று இருப்பது தற்போது தெரியவந்துள்ளது.

அதாவது குஜராத் மாநிலம் கோத்ராவில் உள்ள பள்ளி ஒன்றில் அமைக்கப்பட்டு இருந்த தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய மாணவர்கள் 27 பேரின் தேர்வுத்தாள்களில பதில் எழுதி தருவதாக கூறி ஒவ்வொருவரிடமும் இருந்து தலா ரூ.10 லட்சம் பேரம் பேசி, அதற்காக ரூ.2 கோடியே 30 லட்சத்துக்கான காசோலையும் கைமாறியதாகவும் அந்த மாவட்ட கலெக்டருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் விசாரணை நடத்த கோத்ரா தாலுகா போலீசாருக்கு அவர் உத்தரவிட்டார். விசாரணையில் முறைகேடு நடைபெற்றது தெரியவந்தது. இது தொடர்பாக தேர்வு மையமாக இருந்த பள்ளி முதல்வர் புருஷோத்தம் ஷர்மா, தேர்வு மைய துணை கண்காணிப்பாளர் துஷார்பட், வதோராவை சேர்ந்த கல்வி ஆலோசகர் பரசுராம் ராய், அவரது உதவியாளர் விபோர் ஆனந்த் மற்றும் இடைத்தரகர் ஆரிப் வோரா ஆகிய 5 பேரை கோத்ரா தாலுகா போலீசார் கைது செய்தனர். மேலும் கைது செய்யப்பட்ட துஷார் பட்டிடம் இருந்து ரூ.7 லட்சத்தையும் போலீசார் மீட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com