குஜராத்: பெண்களுக்கு மாதந்தோறும் ரூ. 1000 உதவித் தொகை - அரவிந்த் கெஜ்ரிவால்

குஜராத்தில் ஆம்ஆத்மி ஆட்சிக்கு வந்தால் 18 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு ரூ. 1000 உதவித்தொகை வழங்கப்படும் என டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
குஜராத்: பெண்களுக்கு மாதந்தோறும் ரூ. 1000 உதவித் தொகை - அரவிந்த் கெஜ்ரிவால்
Published on

புதுடெல்லி,

குஜராத்தில் இந்தாண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு கடந்த 27 ஆண்டுகளாக பா.ஜ.க. ஆட்சியில் உள்ளது. இந்த முறை ஆம்ஆத்மி கட்சி ஆட்சியை பிடிக்கும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

பஞ்சாப்பில் தனது தேர்தல் அறிக்கை மற்றும் யுக்தியால் ஆம் ஆத்மி ஆட்சியை பிடித்து அதிகாரத்திற்கு வந்துள்ளது. இதேபோல குஜராத்திலும் ஆட்சியை பிடிக்க முனைப்பு காட்டி வருகிறது. இதன்படி, டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ச்சியாக குஜராத்திற்கு சுற்றுபயணம் மேற்கொண்டு வருகிறார்.

இதனையடுத்து, குஜராத்தில் ஆம்ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால் 300 யூனிட் இலவச மின்சாரம், வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலை வழங்கப்படும். அல்லது மாதம் 3 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என வாக்குறுதிகளை அக்கட்சி அறிவித்துள்ளது.

இந்த நிலையில்,குஜராத்தில் ஆம்ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பெண்களுக்கும் ஆயிரம் ரூபாய் மாத உதவித்தொகையாக வழங்கப்படும் என மேலும் ஒரு வாக்குறுதியை டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில், "குஜராத்தில் ஆம்ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்துப் பெண்களுக்கும் மாத உதவித்தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். இந்த ஆயிரம் ரூபாய் உதவித்தொகை இலவசம் அல்ல. இது உங்கள் உரிமை. மக்கள் பணம் மக்களிடம் செல்ல வேண்டும். சுவிஸ் வங்கியில் அல்ல.

பாஜக மற்றும் காங்கிரஸ் ஒருவரையொருவர் எதிர்த்து பேசி கொண்டிருக்கின்றனர். அவர்கள் மக்கள் நலனை பற்றி பேசவில்லை. மின்சாரம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட மக்கள் பிரச்சினைகளை நாங்கள் எடுத்துக்கொள்கிறோம். டெல்லி,பஞ்சாப்பில் மின்சாரத்தை இலவசமாக அளித்தோம். குஜராத்திலும் ஆட்சிக்கு வந்த 3 மாதத்தில் அதை செய்வோம். " இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com