குஜராத் இரண்டாம் கட்ட தேர்தல்: 93 தொகுதிகளுக்கு வருகிற 5-ந்தேதி வாக்குப்பதிவு

குஜராத் சட்டசபைக்கு நடந்த முதல் கட்ட தேர்தலில் 63.14 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்ததாக தேர்தல் கமிஷன் இறுதி நிலவரத்தை வெளியிட்டது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

ஆமதாபாத்,

182 உறுப்பினர் கொண்ட குஜராத் சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இதில் தெற்கு குஜராத் மற்றும் கட்ச்-சவுராஷ்டிரா பிராந்தியங்களுக்கு உட்பட்ட 89 தொகுதிகளில் முதல் கட்டமாக நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடந்தது.

19 மாவட்டங்களை சேர்ந்த இந்த தொகுதிகளில் காலை 8 மணி முதலே பரவலாக விறுவிறுப்பான வாக்குப்பதிவு காணப்பட்டது. இந்த வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு முடிவடைந்தது. அப்போது 59.24 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்ததாக தேர்தல் கமிஷன் அறிவித்து இருந்தது.

ஆனால் 5 மணிக்கு முன்னரே வாக்குச்சாவடிகளுக்கு வந்த வாக்காளர்கள் தொடர்ந்து வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். இதனால் வாக்குப்பதிவு மேலும் அதிகரித்தது. இதன்மூலம் மொத்தம் 63.14 சதவீத வாக்குகள் இறுதியில் பதிவாகி இருந்தது. இறுதி நிலவரத்தை தேர்தல் கமிஷன் நேற்று வெளியிட்டது. இந்த தொகுதிகளில் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த தேர்தலில் 66.75 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

நேற்று முன்தினம் நடந்த தேர்தலில் அதிகபட்சமாக நர்மதா மாவட்டத்தில் 78.24 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. பழங்குடியினர் அதிகம் வாழும் இந்த மாவட்டத்தில் வாக்களிக்க மக்கள் அதிகம் ஆர்வம் காட்டினர்.

பழங்குடியினரின் ஆதிக்கம் மிகுந்த மற்றொரு மாவட்டமான தபி மற்றும் நவ்சாரி மாவட்டங்களில் முறையே 76.91 மற்றும் 71.06 சதவீத வாக்குகள் பதிவாகின.

இந்த தகவல்களை தேர்தல் கமிஷன் வெளியிட்டு இருக்கிறது. மாநிலத்தில் மீதமுள்ள 93 தொகுதிகளுக்கு வருகிற 5-ந்தேதி (நாளை மறுதினம்) வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பின்னர் 2 கட்ட தேர்தலிலும் பதிவான வாக்குகள் அனைத்தும் 8-ந்தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படுகின்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com